பொய் சொல்வதில் முதல்வருக்கு பிஎச்.டி., பட்டம்: தமிழிசை கிண்டல்
பொய் சொல்வதில் முதல்வருக்கு பிஎச்.டி., பட்டம்: தமிழிசை கிண்டல்
ADDED : மார் 09, 2025 01:25 AM

மதுரை: 'முதல்வர் ஸ்டாலின் செய்யும் தவறுகளை மறைக்க பொய் சொல்கிறார். இதில் அவருக்கு பிஎச்.டி., பட்டம் வழங்கலாம்' என பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பலமுறை தமிழகத்தில் ஆட்சி செய்தும் அடிப்படை கல்வியைக்கூட தமிழில் தி.மு.க., கொண்டுவரவில்லை. தமிழ் தெரியாமலேயே ஒருவர் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் நிலை தான் தமிழகத்தில் இன்றும் உள்ளது. பிற மாநிலங்களில் அவரவர் மொழியில் மருத்துவம், பொறியியல் கற்பிக்கப்படுகிறது.
அதுபோல் தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை கொண்டு வரலாமே என அமித் ஷா தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு தமிழக முதல்வரிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை.
மத்திய அரசின் திட்டங்கள் ஹிந்தியில் உள்ளதாகவும், மூச்சு முட்டுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க., மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தபோது, அந்நிலையை மாற்றியிருக்கலாமே.
பா.ஜ., ஒருபோதும் ஹிந்தியை திணிக்கவில்லை. கூடுதலாக மற்றொரு மொழியை கற்றுக் கொள்ளக் கூறுகிறோம். லோக்சபா தொகுதி மறுவரையறையில், தமிழகம் பாதிக்கப்படாது என கூறிவிட்டோம்.
இருந்தும் அனைத்து முதல்வரையும் துணைக்கழைக்கிறார் முதல்வர். தான் செய்யும் தவறுகளை மறைக்க பொய் சொல்கிறார். இதில் அவருக்கு பிஎச்.டி., பட்டம் வழங்கலாம்.
பா.ஜ., கூட்டணி குறித்து, இன்னும் ஆறு மாதங்களுக்கு எல்லாரும் அமைதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.