'என் பேச்சை கலெக்டர் கேட்கணும்; இல்லையென்றால்...' தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் பேச்சால் தலைமைக்கு நெருக்கடி
'என் பேச்சை கலெக்டர் கேட்கணும்; இல்லையென்றால்...' தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் பேச்சால் தலைமைக்கு நெருக்கடி
ADDED : மார் 01, 2025 01:21 AM

தர்மபுரி: ''கலெக்டர், எஸ்.பி., யாராக இருந்தாலும் என் பேச்சை கேட்கவில்லை என்றால், அவர்கள் மாவட்டத்தில் இருக்க மாட்டார்கள்,'' என, தி.மு.க.,வின் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது. இது, கட்சி தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தி.மு.க.,வின் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக, பென்னாகரத்தைச் சேர்ந்த தர்மசெல்வன் கடந்த 23ல் நியமிக்கப்பட்டார்.
அவர் பொறுப்பேற்ற பின், கிழக்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம், நேற்று முன்தினம் தர்மபுரியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் பங்கேற்ற அக்கூட்டத்தில், தர்மசெல்வன் பேசியுள்ளார்.
அப்பேச்சு தொடர்பான ஆடியோ ஒன்று நேற்று வெளியானது.
அதில், தர்மசெல்வன் பேசியிருப்பதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் நான் சொல்வதை கேட்காத அதிகாரிகள் இருக்க முடியாது. இதில், யாரும் தலையிட முடியாது. நான் கடிதம் வைத்தால் தான் எதுவுமே நடக்கும். கலெக்டர், எஸ்.பி., யாராக இருந்தாலும் என் பேச்சை கேட்கவில்லை என்றால், அவர்கள் இங்கு இருக்க மாட்டார்கள்.
என்னை மீறி எதுவும் செய்ய முடியாது. யாரும் என்னை மீறி செயல்பட்டால், அவர்கள் கதை முடிந்து விடும். தலைவர் யார் குறித்தும், கட்சி லெட்டர் பேடில் கடிதம் அளிக்க அறிவுறுத்தியுள்ளார். அது கலெக்டர் உட்பட அனைவருக்கும் பொருந்தும். கீழ் நிலை அதிகாரிகள் குறித்து, பேச விரும்பவில்லை. யாரும் குறுக்கு சால் ஓட்டக்கூடாது. தர்மபுரி பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம், இதற்கு முன் எப்படி செயல்பட்டார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், இனி நான் சொல்கிறபடிதான் அவர் நடப்பார்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இந்த ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வனிடம் விளக்க கேட்க முயன்றோம். அவர் போனை எடுக்கவில்லை.
தர்மபுரி மாவட்ட தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் தடங்கம் சுப்பிரமணி, அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம் ஆதரவுடன் செயல்பட்டார். பெரிய குற்றச்சாட்டு எதுவும் இல்லாத நிலையில், உதயநிதி மற்றும் சபரீசன் ஆதரவில் மாவட்ட பொறுப்பாளராகி விட்டார். இவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவுடன், கடந்த 2017ல் பென்னாகரத்தில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரனை தோற்கடிக்க வேண்டும் என, தர்மசெல்வன் பேசிய ஆடியோ வெனியானது. தற்போது, இன்னொரு ஆடியோ வெளியாகி, கட்சி தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆடியோ வெளியான நிலையில், தர்மசெல்வனை கட்சி தலைமை சென்னைக்கு அழைத்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

