பிரச்னைக்கு காரணமான கண்டக்டர் - போலீஸ் கட்டிப்பிடித்து அன்பு காட்டி அரசு நடத்திய "ஷோ"
பிரச்னைக்கு காரணமான கண்டக்டர் - போலீஸ் கட்டிப்பிடித்து அன்பு காட்டி அரசு நடத்திய "ஷோ"
UPDATED : மே 25, 2024 03:56 PM
ADDED : மே 25, 2024 03:55 PM

சென்னை: நாங்குநேரியில் அரசு பஸ்சில் போலீஸ் டிக்கெட் எடுப்பதில், ஏற்பட்ட தகராறு காரணமாக, இரு துறைகளுக்கு இடையே மோதல் உண்டானது. இன்று (மே 25) அரசு துறை செயலாளர்கள் சந்திப்புக்கு பின், சம்பந்தப்பட்ட கண்டக்டரும், போலீஸ்காரரும் ஆரத்தழுவி சமதானம் ஆகினர். பிரச்னைக்கு காரணமான கண்டக்டர் மற்றும் போலீசை சமாதானம் செய்ய வைத்து அரசு ஷோ நடத்தி உள்ளது என சமூகவலைதளங்களில் விவாதம் கிளம்பி உள்ளது.
திருநெல்வேலி - துாத்துக்குடி அரசு பஸ்சில் சீருடையுடன் போலீஸ்காரர் ஆறுமுகபாண்டி பயணித்தார். பணி நிமித்தமாக செல்வதால் கட்டணம் எடுக்க முடியாது என அவர் கூற, 'வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்' என கண்டக்டர் கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின், ஆறுமுகபாண்டி கட்டணம் செலுத்தி பயணித்தார். இது குறித்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்த செய்தி தினமும் நாளிதழ்களிலும், டிவிக்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியது.
பிரச்னைக்கு முடிவு காண உள்துறை செயலாளர் அமுதாவை, போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி சந்தித்து இன்று (மே 25) ஆலோசனை நடத்தினார். இதில் பிரச்னைக்கு தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட கண்டக்டரும், போலீஸ்காரரும் ஆரத்தழுவி சமதானம் ஆகினர்.
இரு துறைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் போக்கு முடிவுக்கு வந்தது. சம்பந்தப்பட்ட கண்டக்டரும், போலீஸ்காரரும் ஆரத்தழுவி சமதானம் ஆகிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரச்னைக்கு காரணமான கண்டக்டர் மற்றும் போலீசை சமாதானம் செய்ய வைத்து அரசு ஷோ நடத்தி உள்ளது என சமூகவலைதளங்களில் விவாதம் கிளம்பி உள்ளது.

