நாய் கடித்த சிறுமியின் மருத்துவ செலவை ஏற்றது மாநகராட்சி
நாய் கடித்த சிறுமியின் மருத்துவ செலவை ஏற்றது மாநகராட்சி
ADDED : மே 08, 2024 11:17 PM
சென்னை:சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவின் காவலாளி ரகுவின் மகள் சுரக் ஷா, 5. பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர் வீட்டை சேர்ந்த புகழேந்தி என்பவரின் இரண்டு நாய்கள், சிறுமியை கடுமையாக கடித்து குதறின.
இதில், பலத்த காயமடைந்த சிறுமி, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமிக்கு சற்று உடல்நலம் தேறியுள்ள நிலையில், இன்று, 'பிளாஸ்டிக் சர்ஜரி' உள்ளிட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சிறுமியின் மருத்துவ செலவை ஏற்பதாக புகழேந்தி கூறி, 1 லட்சம் ரூபாய் மருத்துவமனையில் சேர்க்கையின் போது கட்டியுள்ளார். பின், குடும்பத்துடன் மதுரை மாவட்டம், வாஞ்சிநகரத்திற்கு சென்று விட்டார்.
சிறுமியின் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை போன்றவற்றுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்பதால், அதற்கான செலவை முழுமையாக மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிறுமியின் தந்தை ரகு கூறியதாவது:
நாயின் உரிமையாளரை முதல் நாள் மட்டுமே, மருத்துவமனையில் பார்த்தேன். அதன்பின், எவ்வித உதவியும் அவர் செய்யவில்லை. மருத்துவ செலவை சென்னை மாநகராட்சி தான் செய்து வருகிறது. மகளை பார்த்து இரண்டு நாளாகிறது.
சிகிச்சை முடிந்த பின், என் மகளின் நிலை எப்படி இருக்கும் என்று தெரியாது. எனவே, மகளின் படிப்பு செலவையும் அரசு ஏற்று, அவளை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.