ADDED : ஜூலை 04, 2024 10:29 PM
சென்னை:'மாநிலம் முழுதும், வரும் 10ம் தேதி வரை, தற்போதைய வெப்பநிலையே நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
சென்னையில் வெப்பச் சலனம் காரணமாக, நேற்று முன்தினம் இரவு 8:30 முதல், 11:00 மணி வரை தொடர்ந்து மிதமான மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லுாரில், 9 செ.மீ., மழையும், நுங்கம்பாக்கத்தில், 7 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், இன்று முற்பகல் வரையில் சில இடங்களில் கன மழை பெய்யும். பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.
மாநிலத்தின் மற்ற சில இடங்களில் மிதமான மழை பெய்யும். வரும் 10ம் தேதி வரை, மாநிலம் முழுதும் தற்போதைய நிலையே நீடிக்கும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 37 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். சில இடங்களில் வெப்பச் சலனத்தால் மழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, மதுரையில் 39 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கரூர் பரமத்தி, ஈரோட்டில் 38; திருச்சி 37; துாத்துக்குடி, கடலுார் 35; சென்னை நுங்கம்பாக்கம், கோவை, சேலம், புதுச்சேரி 34; ஊட்டி 19 டிகிரி செல்ஷியஸ் என, வெப்பம் நிலவியது.