ADDED : ஏப் 18, 2024 03:40 AM

சென்னை : தபால் ஓட்டு அளிப்பதற்கான கால அவகாசம் இன்று(ஏப்.,18) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் மற்றும் இதர பணியாளர்கள், தபால் ஓட்டளிக்க, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.
லோக்சபா தொகுதிக்கு உள்ளேயே, தேர்தல் பணியாற்றுபவர்கள், ஓட்டுச்சாவடியில் ஓட்டளிப்பதற்கு வசதியாக, அவர்களுக்கு தேர்தல் பணி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தபால் ஓட்டு செலுத்தும் பணி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. ஒவ்வொரு தொகுதியிலும், தபால் ஓட்டுகள் பெறப்பட்டு, பிற தொகுதி ஓட்டுகள் திருச்சிக்கு எடுத்து செல்லப்பட்டன.
திருச்சி பஸ் நிலையம் அருகே உள்ள கலையரங்கில், நேற்று அனைத்து மாவட்டங்களில் இருந்தும், தபால் ஓட்டுகள் கொண்டு வரப்பட்டன. அங்கு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அலுவலர்களிடம், அந்த மாவட்ட தொகுதிக்குரிய தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டன. அதை அவர்கள் பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.
இந்த சூழ்நிலையில், ஒரு சில இடங்களில், தபால் ஓட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, சம்பந்தப்பட்ட தொகுதியில் இருந்து, தபால் ஓட்டு வரவில்லை எனப் புகார் எழுந்தது.
சில இடங்களில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, தபால் ஓட்டளிக்க, இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:
தபால் ஓட்டளிப்போர், 16ம் தேதிக்குள் ஓட்டளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி பெரும்பாலானோர் ஓட்டளித்து விட்டனர். ஒரு சிலர் தங்கள் தொகுதியில் இருந்து தபால் ஓட்டு வரவில்லை என்றனர். சிலர் இரண்டாவது பயிற்சி வகுப்பில் பங்கேற்காததால், தபால் ஓட்டை பெற முடியவில்லை என தெரிவித்தனர்.
இவ்வாறு விடுபட்டவர்கள் தபால் ஓட்டளிப்பதற்காக, இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் தாங்கள் உள்ள பகுதி தேர்தல் அலுவலரிடம் சென்று, தபால் ஓட்டு பெற்று அங்கேயே ஓட்டளிக்கலாம்.
இவ்வாறு பெறப்படும் தபால் ஓட்டுகளை, தேர்தல் நடத்தும் அலுவலர், ஜூன் 3ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட தொகுதி அலுவலருக்கு அனுப்பி வைப்பார். தபால் ஓட்டளிக்கும் பணி இன்றோடு முடிந்து விடும். அதன்பின், விடுபட்டோர் உட்பட யாரும் தபால் ஓட்டளிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

