ADDED : செப் 10, 2024 10:50 PM
சென்னை:நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், 76, உயிரிழந்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளால், சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த, 3ம் தேதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சாதாரண வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், 5ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். தொடர் சிகிச்சை பலனளிக்காத நிலையில், நேற்று முன்தினம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது.
மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று பிற்பகல், 2:40 மணியளவில் வெள்ளையன் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, சென்னை பெரம்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள, அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
வணிகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று கடைகள் அடைக்கப்படும் என, வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல் இன்று மாலை, சென்னையில் இருந்து துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் பிச்சிவிளை கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை காலை, 11:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த வெள்ளையனுக்கு, தங்கம்மாள் என்ற மனைவியும், டைமன் ராஜா, தீபன் தினகரன், மெஸ்மெர் காந்தன் என்ற மூன்று மகன்கள்; அனு பாரதி, அர்ச்சனா தேவி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.