ADDED : மே 17, 2024 02:01 AM

சென்னை:நாடு முழுதும் யானைகள் குறித்த கணக்கெடுப்பு, குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும். இந்த வகையில், 2017ல் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது, தமிழகத்தில், 2,761 யானைகள் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, 2023ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 2,961 யானைகள் இருப்பதாக தெரியவந்தது.
இருப்பினும், இதில் துல்லிய தகவல்களை கூடுதலாக பெற, இரண்டாம் கட்டமாக ஒருங்கிணைந்த யானைகள் கணகெடுப்பு நடத்த தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள வனத்துறைகள் இணைந்து முடிவு செய்துள்ளன. இதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பை வரும், 23ல் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், 26 வனக்கோட்டங்களில் உள்ள, 3,496 சதுர கி.மீ., பரப்பளவு பகுதி, தலா, 5 சதுர கி.மீ., பரப்பளவு என்ற அடிப்படையில் பிரிக்கப்படும். வனத்துறை கள பணியாளர்கள், வன உயிரின ஆர்வலர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து யானைகள் கணக்கெடுப்பில் ஈடுபடுவர்.

