'வழிகாட்டி மதிப்பை உயர்த்தும் முடிவை அரசு கைவிடணும்'
'வழிகாட்டி மதிப்பை உயர்த்தும் முடிவை அரசு கைவிடணும்'
UPDATED : மே 15, 2024 05:39 AM
ADDED : மே 14, 2024 11:29 PM

சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
தி.மு.க., அரசு மூன்று ஆண்டுகளில், மாதம் ஒரு முறை என, தமிழக மக்கள் மீது ஏதோ ஒரு வகையில் கட்டண உயர்வை சுமத்தி வருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் வழிகாட்டி மதிப்பை, 50 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கத் துவங்கிய தி.மு.க., அரசின் செயல் சட்ட விரோதமானது என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அதை மதிக்காமல், உயர்த்தப்பட்ட கட்டணத்தை, அரசு வசூலித்து வந்தது.
இதை எதிர்த்து, கடந்த டிச., 14 மற்றும் இந்தாண்டு ஜன., 17ல் பா.ஜ., கண்டனத்தை பதிவு செய்தது. இதையடுத்து, மார்ச், 6ல் சென்னை உயர் நீதிமன்றம், 2017 வழிகாட்டி மதிப்பையே பின்பற்ற உத்தரவிட்டும், தி.மு.க., அரசு அதை கண்டு கொள்ளாமல், உயர்த்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின்படி, கட்டணம் வசூலித்து வருகிறது.
தற்போது, பத்திரப்பதிவு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதோடு, வழிகாட்டி மதிப்பை, 33 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
தி.மு.க.,வுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், வருமானத்திற்குமே இந்த நடவடிக்கை என்று தெரிகிறது. பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து, தி.மு.க.,வுக்கு எந்த அக்கறையும் இல்லை.
இதை உணர்ந்து, வழிகாட்டி மதிப்பை உயர்த்தும் முடிவை, அரசு கைவிட வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி, 2017 வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலேயே கட்டணங்களை வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

