ADDED : செப் 06, 2024 02:24 AM
சென்னை:'வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், சூறாவளி காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடலில், ஆந்திர கரைக்கு அப்பால் நிலவிய வழி மண்டல சுழற்சியின் தாக்கத்தால், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, அடுத்த இரண்டு நாட்களில் ஒடிசா, மேற்கு வங்கம் நோக்கி நகரலாம்.
அதனுடன் இணைந்த நிலையில், அந்தமான் கடல் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். இந்தச் சூழல், செப்., 11 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழை பெய்யலாம். மன்னார் வளைகுடா, தென் மாவட்ட கடலோரம், குமரிக்கடல் பகுதிகளில் இன்று, மணிக்கு 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசும்.
தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில், மணிக்கு 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.