மன்னிப்பு விவகாரம் விஸ்வரூபம்: லண்டனில் இருந்து மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை
மன்னிப்பு விவகாரம் விஸ்வரூபம்: லண்டனில் இருந்து மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை
UPDATED : செப் 13, 2024 01:20 PM
ADDED : செப் 13, 2024 01:06 PM

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கோரிய வீடியோவை வெளியிட்டதற்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரினார்.
கோவையில் நடந்த கூட்டத்தில், ஜி.எஸ்.டி., வரி வித்தியாசம் தொடர்பாக கிண்டல் தொனியில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் புகார் தெரிவித்தார். அது வைரல் ஆன நிலையில், மன்னிப்பு கேட்டார்.
அவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 'வணிகர்களுக்கு மிஞ்சியது அவமானம் மட்டுமே' என காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால் அரசியல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் லண்டனில் இருக்கும் பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'நிதியமைச்சர் நிர்மலா உடன் அன்னபூர்ணா நிறுவனர் பேசிய வீடியோ வெளியானதற்கு மன்னிப்பு கோருகிறேன். வீடியோ வெளியிட்டதற்காக ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனிடம் வருத்தம் தெரிவித்தேன்.
அன்னபூர்ணா சீனிவாசன் தமிழகத்தின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை, இத்துடன் முடித்து வைக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.