தமிழகம், கேரள மாநில போலீசாருக்கு போக்கு காட்டிய கொலை குற்றவாளி கைது
தமிழகம், கேரள மாநில போலீசாருக்கு போக்கு காட்டிய கொலை குற்றவாளி கைது
ADDED : ஜூன் 20, 2024 02:08 AM
சென்னை:தமிழகம் மற்றும் கேரள மாநில போலீசாருக்கு, நான்கு ஆண்டுகளாக போக்கு காட்டி வந்த, கொலை குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
கோவை, குப்பனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், 45. வீட்டில் தனியாக இருப்பவர்களை நோட்டமிட்டு கொலை செய்து, நகை, பணம் கொள்ளையடிக்கும் குற்றவாளி.
கொள்ளை
அவர், 2012, அக்., 24ல், சென்னை கிண்டியில், ஏழுமலை, 72, என்பவரை கொலை செய்து, பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து தப்பினார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது, 2004ல், கேரள மாநிலம், ஒட்டபாலத்தில், நாகராஜ் என்பவரை கொலை செய்து, பணத்தை கொள்ளையடித்து தப்பியது தெரியவந்தது. இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை, நாகராஜ் கொலை வழக்கில், கேரள மாநில போலீசாரும் கைது செய்து, அம்மாநிலத்தில் உள்ள, கண்ணுார் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அவருக்கு, ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
கடந்த 2020, ஜூன் 3ல், பரோலில் வெளியே வந்த சிவகுமார் தலைமறைவானார். சென்னை கிண்டியில் நடந்த ஏழுமலை கொலை வழக்கு தொடர்பாக, நீதிமன்ற விசாரணைக்கும் ஆஜராகாமல் இருந்தார்.
இதனால் சிவகுமார், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவர், நான்கு ஆண்டுகளாக, இரு மாநில போலீசாருக்கும் போக்கு காட்டி வந்தார்.
வலைவீச்சு
அவரை, சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையிலான, தீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் தேடி வந்தனர்.
தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் சிவகுமார், பல்வேறு பெயர்களில், போலி அடையாள அட்டைகளை தயாரித்து, ேஹாட்டல் மேலாளராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மூன்று மாதங்களுக்கு மட்டுமே ஒரு இடத்தில் இருப்பார்.
போலி ஆவணம் வாயிலாக, சிம்கார்டுகளை சிவகுமார் வாங்கி பயன்படுத்தி வருவதையும், போலீசார் கண்டறிந்தனர்.
கடந்த, 2023, ஆகஸ்ட் முதல் ஈரோடு பகுதியில் உள்ள, ேஹாட்டல் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருவதும், சமீபத்தில் அவரது மனைவி அந்த இடத்திற்கு சென்று வந்ததையும், போலீசார் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான போலீசார், அந்த ேஹாட்டலில் வேலைக்கு சேர்வது போல நடித்து, சிவகுமாரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
அவர், கேரள மாநில போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, கண்ணுார் மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளார்.