PUBLISHED ON : செப் 10, 2024 12:00 AM

''ராதிகா புகாருக்கு, ஆதாரத்துடன் பதிலடி குடுத்துட்டாவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''நடிகர் சங்க விவகாரமா ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''ஆமா... 'நம்ம ஊரு நடிகர் சங்கத்துல, பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கமிட்டி இருக்கா'ன்னு சமீபத்துலராதிகா கேள்வி கேட்டாங்கல்லா...
''அவங்களுக்கு பதிலடி தரும் வகையில், நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டியின் அவசர ஆலோசனை கூட்டம் சமீபத்துல நடந்துச்சு... சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி, நடிகையர் குஷ்பு, சுகாசினி, லலிதகுமாரி, கோவை சரளா எல்லாம் கலந்துக்கிட்டாவ வே...
''அப்ப, '2019ம் வருஷத்துல இருந்தே பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி செயல்படுது'ன்னு சொன்ன பூச்சி முருகன், அந்த கமிட்டி செய்த பணிகளையும், தீர்மானங்களையும் மினிட் புக்ல இருந்ததை சுட்டிக்காட்டி விளக்கியிருக்காரு வே...
''அதோட, 'ரெண்டு நடிகையர் குடுத்த பாலியல் புகாரை, இந்த கமிட்டி விசாரிச்சுது... அந்த ரெண்டுமே, அவங்க தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னையா இருந்ததால, ரெண்டு தரப்பையும் கூப்பிட்டு பேசி, பிரச்னையை தீர்த்து வச்சோம்... இனியும், பாலியல் புகார்கள் வந்தா நடவடிக்கை எடுக்கவும் தயாரா இருக்கோம்'னு விளக்கியிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''மெட்டல் சாலைக்கான பணத்தை சுருட்டிட்டாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை யூனியன், பாண்டகப்பாடி ஊராட்சியில, மெட்டல் சாலை அமைக்க, 17.45 லட்சம்ரூபாய் நிதி ஒதுக்குனாங்க... ஆனா, ரோடு போடாமலே போட்டதா, பில்களை தயார் பண்ணி, பஞ்சாயத்து பெண் புள்ளியும், வேப்பந்தட்டை யூனியன் அதிகாரிகள் சிலரும், மொத்த பணத்தையும் சுருட்டிட்டாங்க...
''இதை கேள்விப்பட்ட போலி சமூக ஆர்வலர்கள், டுபாக்கூர் பத்திரிகையாளர்கள், வக்கீல்கள் சிலர், பஞ்சாயத்து புள்ளியின் கணவர் மற்றும் யூனியன் அதிகாரிகளை மிரட்டி, 'கட்டிங்' வாங்கிட்டு போயிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''அதிகாரி மேல புகார்கள் குவியுதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அதிகாரி, எல்லார்கிட்டயும், 'ரப் அண்டு டப்'பாவே நடந்துக்கிறாருங்க... தன் முன்னாடி யாரும் அமர்ந்து பேசுறதே அவருக்கு பிடிக்காதுங்க...
''இவர் முன்னாடி, மொபைல் போன்ல பேசிய விவசாய சங்க நிர்வாகியிடம், போனை பிடுங்கி, 'இது மண்டபம்இல்ல... என் சேம்பர்'னு கடுப்படிச்சிட்டாருங்க...
''பெண் அதிகாரி ஒருத்தர், மாதாந்திர பிரச்னைக்காக விடுப்பு கேட்டிருக்காங்க... அதுக்கு, 'அரசு மருத்துவமனை டாக்டரிடம் சான்று வாங்கி குடுத்துட்டு, லீவு எடுத்துக்கலாம்'னு கறாரா சொல்லிட்டாருங்க...
''சமீபத்துல, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, செவித்திறன் குறைந்த, வாய்ப் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள், உண்ணாவிரதம் இருந்தாங்க... சாயந்தரம் வரை, அவங்களை பார்க்க அதிகாரி வரவே இல்லைங்க...
''சென்னை வரை தகவல் போக, இரவு, 7:10க்கு வந்த அதிகாரி, 'உங்க குறைகளை தீர்க்க சிறப்பு முகாம் ஏற்பாடு பண்றேன்'னு கோபமா சொல்லிட்டு போயிட்டாருங்க... இவர் மேல நிறைய புகார்கள் போனாலும், தலைமைச் செயலக அதிகாரிகள் தயவு இருக்கிறதால, எந்த நடவடிக்கையும் இல்லைங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.