குழந்தை வைத்திருக்கும் பெண்களை சிறை பிடித்ததால் போராட்டம் வாபஸ்
குழந்தை வைத்திருக்கும் பெண்களை சிறை பிடித்ததால் போராட்டம் வாபஸ்
UPDATED : மே 13, 2024 06:51 AM
ADDED : மே 13, 2024 06:50 AM

நாகப்பட்டினம் : நாகை மாவட்டம், பனங்குடியில் உள்ள சி.பி.சி.எல்., நிர்வாகத்தை கண்டித்து, மூன்று ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் நேற்று முன்தினம் வரை 11 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு என்ற பெயரில் கிராமத்திற்குள் போலீசார் அத்து மீறுவதால், நிம்மதியிழந்த பெண்கள், சி.பி.சி.எல்., தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்திய நிலத்தில் நடப்பட்டிருந்த எல்லைக்கற்களை நேற்று முன்தினம் பிடுங்கி எறிந்தனர்.
கற்களை பிடுங்கிய பெண்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இவர்களில், 9 பெண்கள் கைக்குழந்தைகளை வீட்டில் விட்டு வந்ததால், கலங்கியபடி இருந்தனர்.
![]() |
இவர்களை மட்டும் தனியே தங்க வைத்த போலீசார், இவர்களை ஜாமினில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப் போவதாக கிராமத்தில் போலீசார் தகவலை கசியவிட்டனர்.
அச்சமடைந்த போராட்டக் குழுவினர் போலீசாருடன் நேற்று முன்தினம் இரவு பேச்சு நடத்தினர். இதில், இரு தரப்பிலும் தீர்வு ஏற்பட்டதாக அறிவித்த விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.