ADDED : மே 09, 2024 11:28 PM
நாகர்கோவில் : கன்னியாகுமரி அருகே சாப்பிட்டு விட்டு கை கழுவ தெப்பக்குளத்துக்கு சென்ற சகோதரிகள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
கன்னியாகுமரி அருகே பரமார்த்தலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். தொழிலாளி. இவரது மகள்கள் பிரியா 14, சிவாலி 12. கொட்டாரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் முறையே 9 மற்றும் 7 ம் வகுப்பு படித்தனர்.
பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த இவர்கள் நேற்று காலை மகாதானபுரம் பகுதியில் உள்ள கோயிலுக்கு தனியாக சென்றுள்ளனர். அங்குள்ள தெப்பக்குளத்தின் கரையில் அமர்ந்து சாப்பிட்ட இவர்கள் பின்னர் கை கழுவுவதற்காக குளத்தில் இறங்கியுள்ளனர். அப்போது இருவரும் தவறி தண்ணீரில் விழுந்தனர்.
கரையேற முடியாமல் தத்தளித்த இருவரையும் மீட்க அப்பகுதியில் இருந்த சிலர் முயற்சித்தும் முடியவில்லை. இதன்பின் தீயணைப்புத் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மூழ்கி பலியான இருவரது உடலும் சிறிதுநேரத்திற்குப்பின் மீட்கப்பட்டது. கன்னியாகுமரி போலீசார் விசாரிக்கின்றனர்.