நடந்து சென்ற போதை ஆசாமியை சீண்டிய ஏட்டுவுக்கு கும்மாங்குத்து
நடந்து சென்ற போதை ஆசாமியை சீண்டிய ஏட்டுவுக்கு கும்மாங்குத்து
ADDED : செப் 03, 2024 01:09 AM
ஆவடி: ஆவடி, புதிய ராணுவ சாலை, பழைய மின் வாரிய அலுவலகம் அருகே, அருகே, ஆவடி போக்குவரத்து தலைமை காவலர் ஆனந்தன், 49, மற்றும் எஸ். ஐ., இருவர், நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக நடந்து வந்த போதை ஆசாமியை நிறுத்தி, எங்கிருந்து வருகிறாய் என விசாரித்து உள்ளனர்.அதற்கு போதை ஆசாமி, 'உங்களுக்கு இதே வேலையாக இருக்கிறது. எப்போது பார்த்தாலும் சோதனை செய்து கொண்டே இருக்கிறீர்கள்' என, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், சாலை நடுவே ஓடி, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார். போலீசார் அவரை தடுத்து சமாதானப்படுத்தினர். ஆனால், போதையில் இருந்ததால், தலைமை காவலர் ஆனந்தனிடம் கைகலப்பில் ஈடுபட்டார். தடுக்க முயன்ற எஸ்.ஐ.,க்கள் மீதும் பாய்ந்தார்.
திடீரென ஆனந்தன் கன்னத்தில் போதை ஆசாமி குத்தியதில், அவர் நிலை தடுமாறினார்.
பொறுமையிழந்த போலீசார், அந்த ஆசாமியை நையபுடைத்து, ஆவடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கண்ணில் காயமடைந்த தலைமை காவலர் ஆனந்தன், ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.விசாரணையில், போதையில் ரகளையில் ஈடுபட்டது, ஆவடி, நந்தவன மேட்டூரைச் சேர்ந்த வெல்டர் வெங்கடேசன், 38, என தெரிந்தது. ஆனந்தன் புகாரின்படி, ஆவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.