பல் விழுந்தும் நடிக்கின்றனர் ரஜினி மீது துரைமுருகன் பாய்ச்சல்
பல் விழுந்தும் நடிக்கின்றனர் ரஜினி மீது துரைமுருகன் பாய்ச்சல்
UPDATED : ஆக 26, 2024 02:24 PM
ADDED : ஆக 25, 2024 06:40 PM

வேலுார்; ''மூத்த நடிகர்கள், பல் விழுந்து சாகிற நிலையில் இருக்கிறவன் எல்லாம் நடிப்பதால், இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை,'' என, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலுார் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லுாரில், ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் ஞான வளாகத்தில், அவரது பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
அவரின் உருவசிலைக்கு அமைச்சர் துரைமுருகன், கலெக்டர் சுப்புலெட்சுமி, எம்.பி., கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு எவ்வளவோ அகற்றப்பட்டாலும், மறுபடியும் ஆக்கிரமித்து வருகின்றனர். பல்வேறு குறுக்கீடுகள், ஆக்கிரமிப்பை அகற்றும் போது மாற்றிடம் கேட்கின்றனர்.
எங்கள் துறையில் ஊழியர்கள் குறைவு. போதிய அதிகாரிகள் இல்லை. எங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு செய்து கொண்டிருக்கிறோம். காவிரி விவகாரத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஆதியிலிருந்தே தமிழகத்தின் மீது நல்ல எண்ணம் இல்லாதவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
'மூத்த அமைச்சர்களை வைத்து ஸ்டாலின் கஷ்டப்படுகிறார்' என, நடிகர் ரஜினி பேசியுள்ளாரே என, நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ''மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி போய், பல் விழுந்து, தாடி வளர்த்து, சாகிற நிலையில இருக்கிறவன் எல்லாம் நடிக்கிறதால தான் இளைஞர்கள் நடிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்,'' என்றார்.
ரஜினி பேச்சு
அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் திமுகவில், முதல் ரேங்க் எடுத்திருக்கும் அசாத்தியமான பழைய மாணவர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறாமல் உள்ளனர். அமைச்சர் துரைமுருகனிடம் எச்சரிக்கையாக பேச வேண்டும் எனவும் அவரிடம் ஒரு விசயத்தை கூறினால் அப்படியா சந்தோஷம் என்பார். அவர் அளிக்கும் பதில் நம்மை குழப்பமடையவைக்கும். கருணாநிதியின் கண்ணில் விரல் விட்டு ஆட்டுபவர் என கூறி இருந்தார்.