ADDED : மே 09, 2024 03:56 AM

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான கடைசி கட்ட தேர்தல் அறிவிக்கை வெளியாகி, வேட்புமனு தாக்கல் துவங்கி விட்டதால், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின் தான் நடத்தப்படும் என்பது உறுதியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவு காரணமாக, அத்தொகுதி எம்.எல்.ஏ., பதவி, ஏப்., 6 முதல் காலியாக உள்ளது. இது, தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விபரத்தை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தல் கமிஷனுக்கு முறைப்படி தெரியப்படுத்தி உள்ளார்.
இத்தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நாடு முழுதும் லோக்சபா தேர்தல், ஏழு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடந்தது. ஏழாம் கட்ட தேர்தல், ஜூன் 1 நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது. அதில் விக்கிரவாண்டி இடம் பெறவில்லை.
எனவே, இனிமேல் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பில்லை. ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின், காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் போது, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கும், இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.