ADDED : ஏப் 26, 2024 01:11 AM
சென்னை:சென்னை, தி.நகரில், தமிழக பா.ஜ., சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:
சென்னை தாம்பரத்தில், 4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை, 'டார்கெட்' செய்கின்றனர். இது, அரசியல் சூழ்ச்சி.
தேர்தல் அதிகாரிகளால், தமிழகம் முழுதும் வியாபாரிகள் உட்பட பல்வேறு நபர்களிடம் இருந்து, 200 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், 4 கோடி ரூபாய் பிடிபட்டதில், என் பெயரை பயன்படுத்துகின்றனர். அந்த பணம், என்னுடையது அல்ல.
போலீசாரிடம் பிடிபட்டவர்கள் மட்டுமின்றி, நிறைய பேர் எனக்கு தெரியும். பிடிபட்டவர்கள் எடுத்து சென்ற பணத்திற்கும், எனக்கும் சம்மந்தம் கிடையாது.
போலீசார் சம்மன் அளித்ததன் பேரில், நான் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிப்பேன். யாரும் எதிர்பார்க்காத வகையில், பா.ஜ., மிகப்பெரிய வளர்ச்சி பாதையில் செல்கிறது. அதிக இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும்; பா.ஜ.,வில் உட்கட்சி பூசல் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

