திருமாவளவனின் மதுவிலக்கு கோரிக்கை; பதிலடி கொடுத்த அமைச்சர் நிர்மலா
திருமாவளவனின் மதுவிலக்கு கோரிக்கை; பதிலடி கொடுத்த அமைச்சர் நிர்மலா
UPDATED : ஜூலை 03, 2024 09:03 AM
ADDED : ஜூலை 03, 2024 05:02 AM

புதுடில்லி : 'நாடு முழுதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் லோக்சபாவில் பேசியதற்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லுங்கள்' என தெரிவித்தார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யுமான திருமாவளவன் நேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 47ல் நாடு முழுதும் போதைப் பொருள், சாராயத்தை முழுமையாக ஒழிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்யும் மத்திய அரசு, மது ஒழிப்பை பற்றி கண்டு கொள்ளவில்லை. இந்திய அளவில் இளம் தலைமுறையினர் பாழாகி வருவதை எண்ணி வேதனை அடைகிறேன்.
மத்திய அரசுக்கு இந்த வேதனை இருக்கிறதா என்று தெரியவில்லை. போதைப் பொருள் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமின்றி, நாடு முழுதும் தாராளமாக கிடைக்கின்றன; கள்ளச் சாராயமும் காய்ச்சி விற்கப்படுகிறது. ஆகவே, இந்திய அளவில் பூரண மதுவிலக்கை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
தேசிய அளவில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துவதை வரவேற்கிறேன். ஆனால், திருமாவளவன் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க., தான் தமிழகத்தை ஆள்கிறது. அங்கே தான், கள்ளச்சாராயம் அருந்தி 56 பேர் சமீபத்தில் உயிரிழந்துள்ளனர்.
லோக்சபாவுக்கு வந்து, மத்திய அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன், தமிழக முதல்வருக்கு வழங்குங்கள். போதைப் பொருட்கள் நடமாட்டம் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க., கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தமிழக எம்.பி.,க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.