திருவல்லிக்கேணி 'தியாசபிகல் சொசைட்டி' சொத்து 'அம்போ' பாரம்பரிய கட்டடத்தை விற்க முயற்சி !
திருவல்லிக்கேணி 'தியாசபிகல் சொசைட்டி' சொத்து 'அம்போ' பாரம்பரிய கட்டடத்தை விற்க முயற்சி !
ADDED : மார் 31, 2024 08:10 AM

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள, 'தியாசபிகல் சொசைட்டி' எனப்படும், பிரம்ம ஞானசபைக்கு சொந்தமான பாரம்பரிய கட்டடத்தை விற்க முயற்சி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. உலக அளவில் சகோதரத்துவத்தை வலியுறுத்துவதற்காக துவக்கப்பட்ட, தியாசபிகல் சொசைட்டி எனப்படும் பிரம்ம ஞானசபை, சென்னை அடையாறில், 1882 முதல் செயல்பட்டு வருகிறது.
'மணி அய்யர் ஹால்'
இதற்கு தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த கிளைகள், தியாசபிகல் சொசைட்டியின் பிரதான அமைப்பின் நேரடி கிளைகளாக செயல்படுகின்றன. இவ்வாறு கிளைகள் செயல்படும் இடங்கள் நிர்வாகக் காரணங்களுக்காக, 'லாட்ஜ்' என்று அழைக்கப்படுகின்றன.
அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணி ராஜா ஹனுமந்த தெருவில், தியாசபிகல் சொசைட்டிக்கு, அதன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களால் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் அரங்கம் மற்றும் தங்கும் விடுதி கட்டப்பட்டது.
இது, பிரதான அமைப்பின் கிளையாக இல்லாமல், திருவல்லிக்கேணி தியாசபிகல் சொசைட்டி என்ற பெயரில், 1898ல் தனியாக பதிவு செய்யப்பட்டது. இதற்கான கட்டடம், 'மணி அய்யர் ஹால்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
மெரினா கடற்கரை, சென்னை பல்கலை, மாநிலக் கல்லுாரி போன்றவற்றுக்கு மிக அருகில் இந்த இடம் இருப்பதால், அந்த காலத்தில் அதிகமான கூட்டங்கள், இங்கு தான் நடக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், சென்னை மியூசிக் அகாடமிக்கு தற்போதைய கட்டடம் கட்டும் முன், ஆண்டு மாநாடுகள் இங்கு தான் நடத்தப்பட்டன என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தியாசபிகல் சொசைட்டியின் உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:
இந்த அமைப்பில், எந்த கிளையில் உறுப்பினராக இருப்பவர்கள், வேறு கிளைக்கு தங்களை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி, 2014ல் நிர்வாகிகளாக இருந்தவர்கள், தங்களுக்கு ஆதரவாக சிலரை இங்கு உறுப்பினர்களாகச் சேர்த்தனர்.
இவர்கள் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை முறையாக நடத்தாமல், இந்த அமைப்பின் வழக்கமான செயல்பாடுகளை படிப்படியாக முடக்கினர். இதனால், இங்குள்ள அரங்கம் மற்றும் கட்டடத்தை பராமரிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டதால், கட்டடம் சிதிலமடைந்த நிலைக்கு தள்ளப்பட்டது. பயன்பாடு இல்லை என்பதை காரணமாகக் கூறி, இந்த கட்டடம் மற்றும் நிலத்தை, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்க நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர்.
சென்னையின் பாரம்பரிய சின்னமாக பாதுகாக்க வேண்டிய புராதன கட்டடத்தை, ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்பதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அரசு தலையிட்டு இக்கட்டடத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மணி அய்யர் ஹால்' வரலாறு என்ன?
திருவல்லிக்கேணி லாட்ஜ் என்ற பெயரில், இங்கு தியாசபிகல் சொசைட்டி, 1898ல் துவங் கப்பட்டது. இங்கு தற்போதுள்ள கட்டடம், 1920 - 28ல் கட்டப்பட்டது. அப்போது, இதன் மதிப்புமிக்க உறுப்பினராகவும், பிரபல வழக் கறிஞராகவும், உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சுப்ரமணிய அய்யரின் நினைவாக, இந்த வளாகத்துக்கு, மணி அய்யர் ஹால் என்று பெயரிடப்பட்டது. தியாசபிகல் சொசைட்டியின் தலைவர்களாக இருந்த அன்னி பெசன்ட், ஜார்ஜ் அருண்டேல், ஸ்ரீநிவாஸ் சாஸ்திரி, முத்துலட்சுமி ரெட்டி, சிவசாமி அய்யர் உள்ளிட்டோர், இங்கு கூட்டங்கள் நடத்தி உள்ளனர். சுதந்திர போராட்ட காலத்திலும், அதற்கு பிறகும், பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க கூட்டங்களுக்கு இந்த கட்டடம் சாட்சியாக இருந்துள்ளது. - நமது நிருபர் -

