கவர்னர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள்; காவி உடை படத்துடன் விழா அழைப்பிதழ்
கவர்னர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள்; காவி உடை படத்துடன் விழா அழைப்பிதழ்
ADDED : மே 24, 2024 04:33 AM

சென்னை : கவர்னர் மாளிகையில் இன்று(மே 24) நடக்க உள்ள திருவள்ளுவர் திருநாள் விழாவுக்கு, கவர்னர் ரவி ஏற்பாடு செய்துள்ளார்; விழா அழைப்பிதழில், காவி உடை, நெற்றியில் திருநீறு அணிந்த திருவள்ளுவர் படத்தை அச்சிட்டிருக்கிறார்.
திருவள்ளுவருக்கு பிறந்த நாள் கொண்டாடும் நோக்கில், 1935ம் ஆண்டு ஜனவரியில், பேராசிரியர் நமச்சிவாய முதலியார் தலைமையில், பத்மஸ்ரீ சுப்பையா பிள்ளை, சிவக்கண்ணு பிள்ளை மற்றும் சிலர் சேர்ந்து, 'திருவள்ளுவர் திருநாட் கழகம்' என்ற அமைப்பை துவக்கினர்.
கொண்டாட்டம்
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில், திருவள்ளுவர் அவதார தினமாக வைகாசி அனுஷ நட்சத்திர நாளும், அவர் மறைந்த நாளாக மாசி உத்திர நாளும் கடைப்பிடிக்கப்பட்டன.
அந்த நடைமுறையை ஏற்று, திருவள்ளுவர் திருநாட் கழகம் சார்பில், 1935ம் ஆண்டு மே 18, 19ம் தேதிகளில், சென்னை பச்சையப்பன் மண்டபத்தில், தமிழக புலவர்களை வரவழைத்து, மறைமலை அடிகள் தலைமையில் பெரும் கூட்டம் கூட்டி, திருவள்ளுவரின் பிறந்த நாளை கொண்டாடினர்.
கருணாநிதி முதல்வரான பின், 1971ம் ஆண்டு முதல் தை 2ம் தேதி திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. தற்போதும் தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தை 2ம் தேதி திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், திருவள்ளுவர் கோவிலில் பின்பற்றப்படும் நடைமுறையை பின்பற்றி, வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திர தினமான இன்று, கவர்னர் ரவி, திருவள்ளுவர் திருநாள் விழாவை, கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்துள்ளார்.
இன்று காலை 10:00 மணிக்கு, கவர்னர் ரவி, மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலுக்கு சென்று வழிபட உள்ளார். மாலை 5:00 மணிக்கு, கவர்னர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில், திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாடப்பட உள்ளது.
எதிர்பார்ப்பு
கவர்னர் ரவி மற்றும் விழா சிறப்பு அழைப்பாளர்கள், குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைக்க உள்ளனர். திருவள்ளுவர் குறித்த மின்னணு நுாலை, கவர்னர் வெளியிட உள்ளார்.
மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்கம் நிர்வாக சேயான், திருவள்ளுவர் திருநாள் கழகம் பேராசிரியர் தியாகராஜன், மலேஷியா கோலாலம்பூர் ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தைச் சேர்ந்த சுவாமி மகேந்திரா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். இறுதியாக கவர்னர் ரவி தலைமை உரையாற்ற உள்ளார்.
தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே ஏற்கனவே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், கவர்னர் இன்று திருவள்ளுவர் திருநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும் விழாவுக்கான அழைப்பிதழில், திருவள்ளுவர் காவி உடையுடன் திருநீறு அணிந்து காட்சி அளிக்கும் படத்தை அச்சிட்டுள்ளார்.
தமிழக அரசு திருநீறு இல்லாத வெள்ளை நிற உடை அணிந்த திருவள்ளுவர் படத்தையே வெளியிட்டு வருகிறது.
இன்றைய விழாவில் கவர்னர் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. கவர்னரின் நடவடிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.