இது உங்கள் இடம்: கமலின் சுயமரியாதையாவது மிஞ்சட்டும்!
இது உங்கள் இடம்: கமலின் சுயமரியாதையாவது மிஞ்சட்டும்!
ADDED : ஏப் 05, 2024 01:55 AM

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்:
குரு பங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தன்னுடைய தன்னிகரற்ற நடிப்பால் தனி முத்திரை பதித்து, சகலகலா வல்லவனாக தமிழ் திரை உலகில், மூன்று தலைமுறையாய் ஜொலிக்கும் பத்மஸ்ரீ கமல்ஹாசனின், தற்போதைய நிலையை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது.
'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும், மணம் உண்டு' என, பகுத்தறிவு, சுயமரியாதை, நாத்திகம் என பேசித் திரிந்த கமல், ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக தன்மானத்தை அடகு வைத்தது, வியப்பாகவும், விந்தையாகவும் உள்ளது!
இந்த விஷயத்தில் கமல், இசைஞானி இளையராஜாவிடம் பாடம் கற்றிருக்க வேண்டும்.
ராஜ்யசபா எம்.பி., பதவியானது, தன்னை தேடி வரச் செய்த இளையராஜா எங்கே... இலவு காத்த கிளியாக காத்திருந்து, ஒன்றிரண்டு எம்.பி., சீட்டுக்கு ஆலாய் பறந்து, மூக்குடைபட்ட கமல்ஹாசன் எங்கே!
இதுவரை கமலை நம்பி ஓட்டளித்த, படித்த வாக்காளர்களும், ஒரு சீட்டுக்காக மண்டியிடும் இவரை கண்டு நொந்து, கை கழுவி விடுவர்!
உலக நாயகனாக, உச்சாணிக்கொம்பில் இருந்த கமல்ஹாசன், இனியும் சுயமரியாதை, பகுத்தறிவு, தன்மானம் போன்றவற்றை பேசி, ஒரு புண்ணியமும் இல்லை!
சந்தி சிரிக்காமல் இருக்க வேண்டும் எனில், கலை உலகு இவரை மீண்டும் அரவணைக்க வேண்டும்.

