ADDED : மார் 31, 2024 12:33 AM

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
வி.பத்ரி, கிளாம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கவர்ச்சிகரமான இலவசங்களை அறிவித்திருக்கிறார், முதல்வர் ஸ்டாலின்.
பெட்ரோல் 75 ரூபாய்க்கும், சமையல் காஸ் 500க்கும் தருவாராம்.
சட்டசபை தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைப்பதாகச் சொன்னார். அதையே இன்று வரை அவரால் குறைக்க முடியவில்லை.
இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றை, தமிழக அரசு, குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டுமானால், எவ்வளவு குறைக்கிறதோ அந்த தொகையை, எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழக அரசு தந்து விட வேண்டும். முடியுமா இவரால்?
ஏற்கனவே அறிவித்த இலவசங்களால், தமிழக அரசு, கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
வருவாயே இல்லாமல், கடன் வாங்கியே எத்தனை நாளைக்கு காலத்தை ஓட்ட முடியும்?
அரசு எவ்வளவுக்கெவ்வளவு கடன் வாங்குகிறதோ அந்த கடன் சுமை, ஒவ்வொரு தமிழன் தலை மீதும் விழுகிறது.
இவரைச் சொல்லி குற்றமில்லை; நாம் தான் சுதாரிக்க வேண்டும்!

