நிறுவன பங்குதாரரை ஏமாற்றி நிதி மோசடி செய்தவர்கள் கைது
நிறுவன பங்குதாரரை ஏமாற்றி நிதி மோசடி செய்தவர்கள் கைது
ADDED : ஆக 31, 2024 01:47 AM
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தனியார் நிறுவன பங்குதாரரை ஏமாற்றி அவர் போல் கையெழுத்திட்டு ரூ.50 லட்சம் மோசடி செய்த இருவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் சிவரஞ்சினி 27. மதுரையை சேர்ந்தவர்கள் சுடலைமணி சுனிதா 30,வேல்விழி28. இவர்கள் பங்குதாரராக இணைந்து கட்டட வேலைக்கு தேவையான உதிரி பாகங்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தை 2021ல் மதுரையில் துவக்கினர்.
2022ல் தொழில் சம்பந்தமாக சிவரஞ்சினி வெளிநாட்டிற்கு சென்றார்.
சுடலைமணி சுனிதா கணவர் ஆனந்தசதீஷ், வேல்விழி கணவர் நம்பி 30, நிறுவன கணக்கர்களான மதுரையை சேர்ந்த ராஜேஷ் 33, சரவணன் ஆகியோர் சிவரஞ்சினி நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்தது போல் போலி கையெழுத்திட்டு நிறுவனம் பெயரில் தனியார் வங்கியிலிருந்து ரூ.1.13 கோடி கடன் வாங்கினர். அதில் இருந்து ரூ.50 லட்சத்தை ஆனந்தசதீஷ், நம்பி தனியாக நடத்தும் தனியார் நிறுவனத்திற்கு மாற்றினர்.
இதையறிந்த சிவரஞ்சினி திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ.,கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் மோசடியில் ஈடுபட்ட நம்பி,ராஜேஷை கைது செய்தனர்.
மற்றவர்களை தேடி வருகின்றனர்.