மதுரை சிறையில் ரூ.1.63 கோடி ஊழல் பெண் கண்காணிப்பாளர் உட்பட மூவர் 'சஸ்பெண்ட்'
மதுரை சிறையில் ரூ.1.63 கோடி ஊழல் பெண் கண்காணிப்பாளர் உட்பட மூவர் 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 15, 2025 01:34 AM

மதுரை மத்திய சிறையில், 1.63 கோடி ரூபாய் ஊழல் புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பெண் கண்காணிப்பாளர் ஊர்மிளா உட்பட மூவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மத்திய சிறையில், கைதிகளை கொண்டு மருத்துவ பேண்டேஜ், அலுவலக உறைகள், புக் பைண்டிங் உட்பட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதில், 2016 -- 2021 வரை கண்காணிப்பாளராக ஊர்மிளா இருந்த பணிக்காலத்தில், 2019 - 2021 வரை உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தனியார் நிறுவனங்கள் வாயிலாக பெறப்பட்டன.
சில நிறுவனங்கள், பொருட்களை வழங்கியது போல, போலி பில் தயாரித்து சிறை நிர்வாகத்திற்கு வழங்கின. இதற்கு அதிகாரிகளும் உடந்தை.
இவ்வாறு, 1.63 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாக, ஊர்மிளா, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன், நிர்வாக அலுவலர் தியாகராஜன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், டிசம்பரில், ஊர்மிளா, வசந்தகண்ணன், தியாகராஜன் மற்றும் பொருட்களை சப்ளை செய்த நிறுவன நிர்வாகிகள் உட்பட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சம்பந்தப்பட்டோரின் வீடுகளில் சோதனையும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை சிறை கண்காணிப்பாளராக உள்ள ஊர்மிளா, திருநெல்வேலி சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன், வேலுார் சிறை நிர்வாக அலுவலர் தியாகராஜன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டார்.
- நமது நிருபர் -