ADDED : ஜூலை 29, 2024 12:38 AM

தேனி: கர்நாடகாவில் இருந்து போதைப்பொருளான 'மெத்தம்பெட்டமைன்' வாங்கி வந்து கம்பத்தில் விற்ற கேரளா மலப்புரம் புலக்காடூர் முகமது சல்மானுல் பாரிஸ் 24, உத்தமபாளையம் ஆசிப்யூனஸ் 25, ஆனைமலையான்பட்டி யோகராஜ் 28, ஆகியோரை தேனி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவுப் போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளத்தில் கடந்த மாத இறுதியில் சர்வதேச போதைப்பொருட்களான 'மெத்தம்பெட்டமைன், லைசிரிக் ஆசிட், டைத்லி லிமைட், கொகைன்' கடத்திய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
கம்பம் பகுதியில் மெத்தம் பெட்டமைன் விற்பதாக போதைப் பொருட்கள் தடுப்பு சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் சிறப்பு எஸ்.ஐ., கோபிநாத், போலீசார் முனியாண்டி, ஜெகதீஸ்வரன் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
கம்பம் புதுப்பட்டி பகுதியில் நின்றிருந்த யோகராஜை சோதனை செய்த போது அவரிடமிருந்து ரூ.6000 மதிப்புள்ள 2 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் முகமது சல்மானுல் பாரிஸ், ஆசிப் யூனஸ் ஆகியோர் குறித்து தெரிவித்தார்.
கம்பத்தில் சுற்றித்திரிந்த அந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 4 கிராம் மெத்தம்பெட்டமைன், 35 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேல் விசாரணையில் முகமது சல்மானுல் பாரிஸ், கர்நாடாகாவில் இருந்து போதைப் பொருட்கள் வாங்கி வந்து கம்பம் பகுதியில் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. கைதான மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.