ADDED : மார் 02, 2025 05:35 AM

சென்னை: 'தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி, தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 8 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.
ராமேஸ்வரம், காக்காச்சி பகுதிகளில் தலா 7; திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் தலா 6; மாஞ்சோலை, செங்கோட்டை, தங்கச்சிமடம், நீடாமங்கலம், பாபநாசம் பகுதிகளில் தலா 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். அதேபோல நாளையும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரத்தில் லேசான பனி மூட்டம் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.