திருப்புல்லாணி கோவில் நகைகள் மாயம் ஸ்தானிகர் முன்ஜாமின் மனு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
திருப்புல்லாணி கோவில் நகைகள் மாயம் ஸ்தானிகர் முன்ஜாமின் மனு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 03, 2024 11:27 PM
மதுரை:ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோவிலில் 30 தங்கம், 16 வெள்ளி நகைகள் மாயமாகின. ராமநாதபுரம் சமஸ்தான திவான் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். ஸ்தானிகர் ஸ்ரீனிவாச அய்யங்கார் மீது வழக்கு பதியப்பட்டது. அவர் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி பி.புகழேந்தி: ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தின் கீழ் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் இதர மாவட்டங்களில் 111 கோவில்கள் உள்ளன. வழக்கமான பூஜைகளுக்குத் தேவையான நகைளைத் தவிர, பிற நகைகள் சமஸ்தான கருவூலத்தில் தனி பெட்டகத்தில் பராமரிக்கப்படுகின்றன. பெட்டக சாவிகள் ஸ்தானிகர்களிடம் உள்ளன.
கோவிலிலுள்ள தினசரி பயன்படுத்தப்படும் நகைகளும் - சாத்துபடி, ஸ்தானிகர் வசம் உள்ளன. வழக்கமாக, ஸ்தானிகர் மட்டுமே அறைக்குள் சென்று நகைப் பெட்டகத்தை திறப்பது வழக்கம். நகைகளை எடுத்த பின்னர், மனுதாரர் நகைப் பெட்டிக்கு 'சீல்' வைப்பார். மனுதாரர் பல சந்தர்ப்பங்களில் எடுத்துச் செல்லும் பொருட்களின் பட்டியல், பதிவு செய்யப்பட்டு, பிற அலுவலர்களால் கையொப்பமிடப்பட்டு சான்றளிக்கப்படுகிறது. நகைகளை மீண்டும் திருப்பிக் கொடுக்கும்போது, பதிவேட்டிலுள்ள பதிவுகளைக் கொண்டு பொருட்களின் எண்ணிக்கை சரிபார்க்கப்படுகிறது.
மனுதாரர் ஸ்தானிகர் பதவியில் இருப்பதாலும், அது பரம்பரை பதவி என்பதாலும், அவர் அறையிலிருந்து வெளியே வரும்போது தனிப்பட்ட முறையில் சோதனை நடத்தப்படமாட்டாது. இவ்வாய்ப்பை பயன்படுத்தி கோவில் நகைகளை அபகரித்துள்ளார். காணாமல் போன நகைகளுக்கு தாம் பொறுப்பேற்று, திரும்ப ஒப்படைப்பதாக உறுதியளித்து புகார்தாரரிடம் மனுதாரர் கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் நகைகளைத் திருப்பித் தரவில்லை.
மனுதாரர் மார்ச் 1ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஏற்கனவே ஒருமுறை மனுதாரர் அசல் நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை வைத்தது 2022ல் எடைபோடும்போது அடையாளம் காணப்பட்டது. மனுதாரர், தன் செயலுக்கு மன்னிப்புக் கோரினார்.
அசல் நகையை உறவினர் ரமேஷ் வாயிலாக திருப்பிக் கொடுத்தார். மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. மனுதாரர் 2023 மார்ச் 27ல் கடவுளை அலங்கரிக்க 19 பொருட்களை எடுத்துள்ளார். மனுதாரருக்குத் தெரியாமல் கோவிலின் நகைகள் காணாமல் போக வாய்ப்பில்லை. அவரிடம் இருக்கும் சாவியைக் கொண்டுதான் நகைப் பெட்டகத்தை திறக்க முடியும். மனுதாரர் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோவில் நகைகளை அபகரித்துள்ளார் என்பது தெளிவாகிறது. மனுதாரருக்கு முன்ஜாமின் வழங்க விரும்பவில்லை. அவரை காவலில் எடுத்து விசாரித்தால்தான் மாயமான நகைகளை மீட்க முடியும். முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
ஆதி ஜெகநாதப் பெருமாள் கோவில் பழமையான மற்றும் புகழ்பெற்ற வைணவ கோவில்களில் ஒன்று. கடவுளுக்கு சொந்தமான சொத்துக்களை முறையாக பராமரிக்கும் பொறுப்பு சமஸ்தானத்திற்கு உள்ளது. கருவூல நுழைவு வாயிலுக்கு இரட்டை பூட்டு முறை பராமரிக்கப்பட்டு வந்தாலும், ஸ்தானிகர்கள் நகைகளை கையாள்வதை கண்காணிக்க சி.சி.டி.வி., கேமராக்களை நிறுவ வேண்டும். ஸ்தானிகர்கள் தாங்களாகவே நகைகளை எடுத்துக் கொள்ள அனுமதிப்பதற்குப் பதிலாக சமஸ்தானம், ஸ்தானிகர்கள் அல்லது பூஜாரிகளிடம் ஒப்புதலைப் பெற்ற பின்னர், திருவிழாக் காலங்களில் அந்தந்த கோவில்களுக்குத் தேவையான நகைகளை சமஸ்தான நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும். தினசரி பூஜைகளுக்குத் தேவையான நகைகள், பொருட்களை பராமரிக்க, காணாமல் போவதை தடுக்க, அந்தந்த கோவில்களில் தனித்தனி பாதுகாப்பு லாக்கர்கள் ஏற்படுத்த வேண்டும். 2010க்கு பின்னர், பொருட்கள் இருப்பை மதிப்பீடு செய்யவில்லை என தோன்றுகிறது. கோவில்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அறநிலையத்துறைக்கு உள்ளது. அவ்வப்போது நகைகள், பொருட்களை ஆய்வு செய்ய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.