ADDED : ஜூன் 25, 2024 01:09 AM

சென்னை: இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் தென் மண்டல பிரிவு சார்பில், சுற்றுலா துறையில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் என்ற கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.
கருத்தரங்கில், இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் தென் மண்டல இயக்குனர் வெங்கடேசன் பேசியதாவது:
சுற்றுலா துறையை மேம்படுத்த, மத்திய சுற்றுலா அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்த, 'திறமை வேலை வாய்ப்பு' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நாட்டின் பெருமைமிகு இடங்களை தெரிந்து கொள்ளும், 'இன்கிரடிபிள் இந்தியா' திட்டம் வாயிலாக மாணவர்கள், பெண்கள் பங்கேற்று, சுற்றுலா துறையை மேம்படுத்த உதவலாம். மலை கிராமங்களிலும் சுற்றுலா குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உள்ளோம். சுற்றுலா துறை உள்கட்டமைப்பை, மாநிலங்களிடையே மேம்படுத்தவும், மத்திய சுற்றுலா துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனாவுக்கு பின், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் இந்தியா வருவது அதிகரித்துள்ளது. அவர்கள், நம் நாட்டில் உள்ள பல இடங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். தென் மாநிலங்களின் சிறப்பு மற்றும் முக்கியமான இடங்களை எடுத்துக் கூறி, அவர்களை கவர்ந்து வருகிறோம்.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லவும், அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், சுற்றுலா பொருளாதாரம் உயரத் துவங்கி உள்ளது.
அனைத்து துறைகளிலும் பாலின சமத்துவம் என்பது முக்கியம். சுற்றுலா துறையிலும் பெண்கள் அதிகம் பணிபுரிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். இதற்காக, 'யுவா சுற்றுலா கிளப்' திட்டத்தை உருவாக்கி, சுற்றுலா வேலைவாய்ப்பு, விழிப்புணர்வு போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் தென் மண்டல தலைவர் தேவகி தியாகராஜன், பிரபல சமையல் கலைஞர் தாமு, ராணி மேரி கல்லுாரி முன்னாள் முதல்வர் யூஜின் பின்டோ, ஐ.எச்.எம்., கல்லுாரி முதல்வர் பரிமளா, பயண முகவர்கள் சங்கச் செயலர் பத்மினி நாராயணன், மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் வி.கே.டி.பாலன் ஆகியோர் பங்கேற்றனர்.