கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சி: தடை கேட்ட வழக்கில் அரசுக்கு உத்தரவு
கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சி: தடை கேட்ட வழக்கில் அரசுக்கு உத்தரவு
ADDED : மே 10, 2024 04:23 AM
சென்னை : 'கல்வி நிறுவன வளாகங்களில், வர்த்தகக் கண்காட்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது' என, அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, நான்கு வாரத்தில் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரத் என்பவர் தாக்கல் செய்த மனு: கல்வி நிறுவனங்களில், கல்வி சாராத கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் என, எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது; கல்வி சார்ந்த நிகழ்வுகளை மட்டுமே நடத்த வேண்டும் என, 2017ல் தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை மீறி, திருச்சி மற்றும் வேலுாரில் உள்ள தனியார் பள்ளிகளில், கண்காட்சி நடத்தப்பட்டுள்ளன.
கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அங்கேயே வீசப்பட்டதால், பள்ளி நேரத்தில் விளையாடிய மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவு பின்பற்றப்படவில்லை. இதுதொடர்பாக, நான் அளித்த மனுவை அரசு பரிசீலிக்கவில்லை.
எனவே, கல்வி நிறுவன வளாகங்களில், வணிக ரீதியிலான கண்காட்சிகளை நடத்த அனுமதி வழங்கக்கூடாது என, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.கலைமதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு நான்கு வாரத்தில், தமிழக அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.