ADDED : மே 10, 2024 05:27 AM

சென்னை : சென்னை சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதியாக டி.லிங்கேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, சென்னை, திருச்சி, நாமக்கல் உள்பட மாநிலம் முழுதும், 61 மாவட்ட நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னையில், நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜெ.சந்திரன், முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டு உள்ளார். மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அல்லிகுளம் வளாகத்தில் செயல்பட்டு வரும் கூடுதல் நீதிமன்ற நீதிபதிகள் பி.சுரேஷ்குமார், ஜி.புவனேஸ்வரி, எல்.ஆபிரகாம் லிங்கன், ஆர்.தோத்திரமேரி, சி.உமாமகேஸ்வரி,ஆர்.ராஜ்குமார் ஆகியோரும்இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அல்லிகுளம் வளாகத்தில் செயல்பட்டு வந்த மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக், திண்டிவனம் முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதியாகவும்; 3வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த், தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதியாகவும் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல, 17 மூத்த சிவில் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகளாக, பல்வேறு நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் அறிவித்துள்ளார்.