ADDED : ஏப் 19, 2024 01:34 AM
சென்னை:ரேஷன் கடைகளை கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் நடத்துகின்றன.
ஒரு சங்க ஊழியர்களை, வேறு சங்கத்திற்கு இடமாற்ற முடியாது. பல ஊழியர்கள் வீட்டில் இருந்து, 40 கி.மீ., முதல், 90 கி.மீ., தொலைவில் உள்ள சங்கங்களின் கடைகளில் பணிபுரிவதால் சிரமப்படுகின்றனர்; சம்பளத்திலும் வித்தியாசம் உள்ளது.
எந்த கடைக்கும் இடமாற்றம் செய்யும் வகையில், பொது நிலைத்திறனின் கீழ் கொண்டு வருமாறு, ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான சாதக, பாதகம் குறித்து பரிசீலித்து, கூட்டுறவு துறைக்கு அறிக்கை அளிக்க, 2023ல், திருப்பூர் மண்டல இணை பதிவாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
குழு அறிக்கை விபரம் தற்போது வெளியாகியுள்ளது. சாதகமான அம்சத்தில், 'இடமாறுதல்கள் அனைத்தும் ஊழியர்கள் இருப்பிடத்திற்கு, 10 கி.மீ.,க்குள் மட்டுமே இருக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க தலைவர் ஜி.ராஜேந்திரன் கூறுகையில், ''குழு, ஊழியர்களுக்கு சாதகமாக குறிப்பிட்டிருக்கும் அம்சங்களை அரசு உடனே அமல்படுத்த வேண்டும்,'' என்றார்.

