108 மாத நிலுவை தொகை வழங்க போக்குவரத்து ஓய்வூதியர்கள் மறியல்; சென்னையில் மட்டும் 1,200 பேர் கைது
108 மாத நிலுவை தொகை வழங்க போக்குவரத்து ஓய்வூதியர்கள் மறியல்; சென்னையில் மட்டும் 1,200 பேர் கைது
ADDED : ஆக 28, 2024 04:13 AM

சென்னை : நிலுவையில் உள்ள, 108 மாத அகவிலைப்படி உயர்வு தொகை, ஓய்வு கால பலன்கள் உள்ளிட்ட, 13 கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, கும்பகோணம், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய, ஒன்பது நகரங்களில், நேற்று போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பல்லவன் சாலையில் உள்ள பணிமனையில் இருந்து, நேற்று ஊர்வலமாக சென்ற ஓய்வூதியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
போக்குவரத்து பாதிப்பு
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது; சாலையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு சிலர், சாலையின் மறுபுறத்துக்குச் சென்று, பஸ்களை மறித்தனர். இதனால், பல்லவன் சாலையில், 30 நிமிடங்கள் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 80 பெண்கள் உட்பட, 1,200 பேரை, அண்ணா அரங்கத்தில் வைத்தனர்; மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச்செயலர் கர்சன் கூறியதாவது:
கடந்த 2015- நவம்பர் முதல், அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றோம். ஆனால், அரசு மேல்முறையீடு செய்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.
ஓய்வூதியம் வழங்குவதில், நிர்வாகத்தில் அக்கறையற்ற போக்கே நிலவுகிறது. 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் தற்போது வரை, 2,000த்துக்கும் மேற்பட்டோரின் ஓய்வு கால பணப்பலன் நிலுவையில் இருக்கின்றன. ஒவ்வொரு தொழிலாளிக்கும் சராசரியாக, 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டியிருக்கிறது.
தீர்வு தேவை
மாநில அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக, 7,850 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு, 3,050 ரூபாய் தான் தரப்படுகிறது. 30,000த்துக்கும் மேற்பட்டோர் குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுகின்றனர்.
அவர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் மருத்துவப்படி வழங்கப்படுவதில்லை. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். அடுத்தகட்ட நடவடிக்கையை, அடுத்த வாரத்தில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த போராட்டத்தில், அமைப்பின் பொருளாளர் வரதராஜன், மண்டல செயலர்கள் வீரராகவன், சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.