UPDATED : மே 31, 2024 12:13 PM
ADDED : மே 31, 2024 05:53 AM

மதுரை: தியானத்திற்காக கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடியை எதிர்த்து 'கோபேக் மோடி' என 'எக்ஸ்' தளத்தில் டிரெண்டாக்கும் எதிர்க்கட்சிகளுக்கு, பா.ஜ.,வினர் 'மோடி அகெய்ன்' என ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கி பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தேர்தல் விதிமுறைக்கு மாறானது எனக்கூறி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் அவரது வருகையை கண்டித்து 'கோபேக் மோடி' என எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்து வருகின்றன.
இதையடுத்து பா.ஜ.,வின் ஐ.டி.,விங்கும் எக்ஸ் தளத்தில் பதிலடியாக 'மோடி அகெய்ன்' என ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறது. மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனைப்படி, ஐ.டி.விங்க் தலைவர் பாலாஜி உள்ளிட்டோர் உடனே களத்தில் இறங்கினர்.
ஐ.டி.,விங்க் நிர்வாகிகள் கூறுகையில் ''மோடியை வரவேற்று நேற்று மாலை 4:00 மணிக்கு ஹேஷ்டேக் டிரெண்ட் செய்ய திட்டமிட்டோம். ஆனால் தி.மு.க.,வினர் காலை 11:00 மணிக்கே 'கோபேக் மோடி' என டிரெண்ட் செய்தனர்.
உடனே பா.ஜ.,வும் பதிலடி கொடுக்கும் வகையில் களத்தில் இறங்கி மீண்டும் மோடி என்கிற வகையில் 'மோடி அகெய்ன்' என டிரெண்ட் செய்தோம். துவங்கிய சில மணி நேரத்திலேயே எதிர்க்கட்சிகளின் ஹேஷ்டேக்கை கடந்து ஒரு லட்சத்துக்கும் மேல் பார்வைகளை பெற்றது. இதனால் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்'' என்றனர்.