சவுக்கு சங்கரை விசாரிக்க ஒரு நாள் போலீஸ் கஸ்டடி : திருச்சி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை விசாரிக்க ஒரு நாள் போலீஸ் கஸ்டடி : திருச்சி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் அனுமதி
ADDED : மே 17, 2024 01:08 AM

திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறி டி.எஸ்.பி., யாஸ்மின், பெண் போலீசார் பற்றி அவதுாறாக பேட்டி யளித்ததாக, 'யுடியூபர் சவுக்கு சங்கர் மீது, திருச்சி மாவட்ட 'சைபர் கிரைம்' போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோவை சிறையில் இருந்த சங்கர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக, நேற்று முன்தினம் கோவை சிறையில் இருந்து, பெண் போலீசார், அவரை திருச்சிக்கு அழைத்து வந்து, திருச்சி மூன்றாவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயப்ரதா முன் ஆஜர்படுத்தினர்.
அப்போது சங்கர், வேனில் வரும்போது, பெண் போலீசார் தன்னை தாக்கியதாக புகார் கூறினார். இதையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
பின், டி.எஸ்.பி., புகாரில் பதிவான வழக்கில், அவரை நீதிபதி, வரும், 28ம் தேதி வரை ரிமாண்ட் செய்து உத்தரவிட்டார்.
அப்போது, திருச்சி 'சைபர் கிரைம்' போலீசார் சார்பில் நீதிமன்றத்தில், சங்கரை விசாரிக்க, 7 நாட்கள் கஸ்டடி கேட்டு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை விசாரிக்க வசதியாக, நேற்று முன்தினம் இரவு, லால்குடி கிளை சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
போலீசாரின் கஸ்டடி மனு மீதான விசாரணைக்காக, நேற்று காலை பெண் போலீசார் பாதுகாப்பில் அவர் அழைத்து வரப்பட்டார். அப்போது திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே கூடியிருந்த பெண்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்காக, வக்கீல்கள் கென்னடி, கங்கைசெல்வன், அலெக்ஸ் வாதாடினர்; அரசு தரப்பில் ஹேமந்த் ஆஜரானார்.
சங்கரை கஸ்டடிக்கு அனுப்ப வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து வாதிடுகையில், 'பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், சனாதனம் பேச்சால் உதயநிதி மீதான வழக்குகள், நடிகை குஷ்பு மீதான வழக்குகள் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டாலும், கடைசியில் ஒரே இடத்தில் தான் விசாரிக்கப்பட்டது.
'அதுபோல் தான் இந்த வழக்கும் வரும். ஆகையால், ஒரு வழக்கிலேயே பலமுறை கஸ்டடி கொடுக்கத் தேவையில்லை. சங்கர் பேச்சு குறித்து, 10 லட்சம் பெண்கள் புகார் கொடுத்தால், அவ்வளவு புகார்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய முடியுமா அல்லது ஒவ்வொரு வழக்குக்கும் கஸ்டடி தான் கொடுக்க முடியுமா?
தேவையில்லை
'ஏற்கனவே இந்த வழக்கில் கோவை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்து விட்டதால், மீண்டும் கஸ்டடி கொடுக்கத் தேவையில்லை' என்று வாதிட்டனர்.
அதற்கு அரசு தரப்பு வக்கீல், 'பெண் போலீசார் பற்றி அவதுாறு பேசிய சங்கரை துாண்டியது யார் என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரிக்க வேண்டியுள்ளது; ஆகையால் கஸ்டடி வழங்க வேண்டும்' என்ற வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயப்ரதா, ஒருநாள் கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
மேலும், விசாரணையின் போது, மூன்று முறை வக்கீலை அவர் சந்திக்க அனுமதிக்க வேண்டும்; துன்புறுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை முடிந்து, 17ம் தேதி மாலை, 4:00 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து, சங்கரை விசாரணைக்காக, திருச்சி சைபர் கிரைம் போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

