மும்மொழியா... இரு மொழியா... எது சிறந்த கல்வி கொள்கை?
மும்மொழியா... இரு மொழியா... எது சிறந்த கல்வி கொள்கை?
ADDED : மார் 12, 2025 08:38 PM
''தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கை மாடலை தமிழகத்தில் திணிக்க பா.ஜ., முயற்சிக்கிறது,'' என அமைச்சர் தியாகராஜன் தெரிவிக்க, ''அப்படியென்றால் அவருடைய பேரக் குழந்தைகள் மும்மொழி படிப்பதேன்?'' என கேள்வி எழுப்பி இருக்கிறார் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.
தேசிய சராசரியை விட சிறந்த நிலை!
மதுரையில் தியாகராஜன் அளித்த பேட்டி:
மும்மொழிக் கொள்கை முழுமையாக தோல்வியடைந்த மாடல். தமிழகத்தின் இரு மொழி கொள்கை தான் வெற்றியடைந்த கொள்கை. அதனால் தான், மற்ற மாநிலங்களும் இதை பின்பற்ற விரும்புகின்றன.
வெற்றி அடைந்த இரு மொழி கொள்கையை எப்படியாவது அகற்றி விட வேண்டும் என்றும், தோல்வி அடைந்த மும்மொழிக் கொள்கையை எப்படியாவது தமிழகத்திலும் அமல்படுத்தி விட வேண்டும் என துடிக்கிறது மத்திய அரசு. அறிவுள்ளவர்கள் யாரும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டார்கள்.
மும்மொழிக் கொள்கை 1968ல் அமல்படுத்தப்பட்டது. 57 ஆண்டுகளாகியும், இக்கொள்கையை இந்தியாவில் எங்குமே முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. யாரெல்லாம் தமிழகத்தைப் போல் இருமொழிக் கொள்கையை பின்பற்றுகிறார்களோ, அங்கு தேசிய சராசரியை விட சிறந்த நிலையை எட்டியுள்ளது. இரு மொழி கொள்கைதான் சிறந்தது என்பதற்கு இதுவே உதாரணம்.
'நமக்கு தமிழ், உலகிற்கு ஆங்கிலம்' என்றார் அண்ணாதுரை. உ.பி., பீஹார், ம.பி., ஆகிய மாநிலங்களில் இருமொழிக் கொள்கை அமல்படுத்தி இருந்திருந்தாலே, நமக்கு மூன்றாவது மொழி தேவைப்படாது. இரண்டாவது மொழியை ஒழுங்காக கற்றுக் கொடுத்திருந்தால், ஆங்கிலம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இணைப்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தை ஒரு தரப்பார் கற்கவே இல்லை. ஆனால், அவர்களுக்குத் தெரிந்த ஹிந்தி மொழியை எல்லோரும் கற்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. அதற்காகவே, மும்மொழி கல்வித் திட்டத்தை வலுக்கட்டாயமாக திணிக்கின்றனர்.
மொழியை திணிக்க மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது. இரண்டாவது மொழியையே சிறப்பாக கற்றுத்தர முடியாதவர்கள், மூன்றாவது மொழியை படிக்கச் சொல்வதில் எவ்வித நியாயமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
பார்லி.,யில் தமிழக எம்.பி.,க்கள் ஓவர் நடிப்பு!
துாத்துக்குடியில் அண்ணாமலை அளித்த பேட்டி:
மும்மொழி கொள்கைக்கு தமிழக மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்கை மே மாதத்தில் எட்டிவிடுவோம். தமிழகத்தில் 2 லட்சம் பேர் மட்டுமே மும்மொழி கல்வியில் படிப்பதாக தமிழக அரசு கூறி வந்தது.
தற்போது 15 லட்சத்து 20,000 குழந்தைகள் மும்மொழி படிப்பதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறி உள்ளார். அது பொய்யான தகவல். உண்மையில், 30 லட்சம் மாணவ, மாணவியர் மும்மொழி கல்வியை கற்று வருகின்றனர்.
அமைச்சர் பழனிவேல் ராஜன் மகன் இந்திய குடிமகனா அல்லது அமெரிக்க குடிமகனா? அதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அறிவுள்ளவர்கள் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார் அமைச்சர் தியாகராஜன்.
அவருடைய குழந்தைகள் 3 மொழி சொல்லிக் கொடுக்கும் பள்ளியில் படித்தால், யாருக்கு அறிவு இல்லை என்பதை பழனிவேல்ராஜன் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களின் குழந்தைகள், அவரின் பேரக் குழந்தைகள், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்களின் குழந்தைகள் மூன்று மொழி பள்ளிகளில்தான் படிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு நியாயம், சாதாரண மக்களுக்கு ஒரு நியாயமா? அதனால்தான் சமகல்வியை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
தமிழகத்தை பொறுத்தவரை கற்றல் திறன் குறைந்து பள்ளி கல்வித் துறை திவாலாகிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் வழி கல்வி படிப்போர் 27 சதவீதம் குறைந்துள்ளனர். அமைச்சரின் மகள் பிரெஞ்ச் படிக்க முயற்சி செய்யட்டுமா? என கேட்கும்போது, சாதாரண மக்களின் குழந்தைகள் மூன்றாவது ஒரு மொழியை கற்க முயற்சி செய்யக்கூடாதா? என்பதை அவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக மக்களை குறை கூறவில்லை. தமிழக எம்.பி.க்கள்தான் சரியாக நடந்துகொள்ளவில்லை என கூறினார். அது எப்படி ஒட்டுமொத்த மக்களை குறைகூறுவதாக அர்த்தமாகும்? பார்லி,.யில் தமிழக எம்.பி.க்கள் ஓவராக நடித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர்-