டிரில்லியன் பொருளாதார இலக்கு சாத்தியமில்லை: எஸ்.ஆர்.சேகர் போதை பழக்கம் தொழில்துறையை முடக்கி விட்டதாக கூறுகிறார் எஸ்.ஆர்.சேகர்
டிரில்லியன் பொருளாதார இலக்கு சாத்தியமில்லை: எஸ்.ஆர்.சேகர் போதை பழக்கம் தொழில்துறையை முடக்கி விட்டதாக கூறுகிறார் எஸ்.ஆர்.சேகர்
ADDED : ஜூலை 02, 2024 05:51 AM
கோவை : 'கடந்த 20 ஆண்டு காலமாக, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி விகிதம் தேங்கி இருக்கிறது அல்லது வளர்ச்சி குறைவாக உள்ளது. அதற்கு மிகப் பெரும் காரணம் சாராயம்' என, பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
வரும் '2030ம் ஆண்டுக்குள், 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதே தமிழகத்தின் இலக்கு' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த இலக்கை எட்ட முடியுமா என்பது சந்தேகம்தான். காரணம், போதைக்கு அடிமையாக இருக்கும் தொழிலாளர்கள் தான்.
கடந்த 1971ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, தனக்கே உரிய வார்த்தை ஜாலத்தில், 'மதுவிலக்கை ஒத்தி வைக்கிறேன்' எனக் கூறி, ராஜாஜியால் இரு தலைமுறைகளுக்கு மறக்கடிக்கப்பட்ட மதுப்பழக்கத்தை, சாராய விற்பனைக்கு அனுமதித்ததன் வாயிலாக மீண்டும் கொண்டு வந்தார்.
இன்று அந்த சாராயம், எல்.எஸ்.டி., கஞ்சா, அபின், போதைப்பொருள் என மிகப் பெரிதாக வளர்ந்துள்ளது. இந்த போதைப் பழக்கம், தொழில்துறைக்கு பெரும் பாதகமாக மாறிவிட்டிருக்கிறது.
தமிழக தொழில் துறையில் 35 சதவீதம் உற்பத்தித் துறை சார்ந்தது. அவர்கள் நிரந்தர தொழிலாளர்களை நம்பி இருக்கின்றனர். உள்ளூரைச் சேர்ந்த நிரந்தர தொழிலாளர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பதால், உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக, தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.
போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களின் திறன், 50 சதவீதம் வரை குறைந்து விட்டது. புதிய தொழில்நுட்பத்தை அவர்களால் கற்றுக்கொள்ள முடிவதில்லை என்கின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி விகிதம் தேங்கி இருக்கிறது அல்லது வளர்ச்சி குறைவாக உள்ளது. அதற்கு மிகப்பெரும் காரணம் சாராயம்.
ஜி.டி.பி., 8.1 சதவீதமாக இருக்கிறது. ஆனால், மது குடிப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரிக்கிறது. குடிப்போரின் எண்ணிக்கையைக் குறைக்கவும், டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்கவும், அரசு எவ்வித முயற்சியையும் செய்யவில்லை.
மது தரும் வருவாய்
தமிழக அரசின் மொத்த வருவாயில், மூன்றில் ஒரு பங்கு சாராய விற்பனையை சார்ந்திருக்கிறது. மது விற்பனையில் 5, 6 நிறுவனங்களும், அரசியல்வாதிகளும் மட்டுமே பயனடைகின்றனர். 45,000 கோடி ரூபாயில் பெருமளவு லஞ்சமாக இவர்களுக்குச் செல்கிறது. லஞ்சம் என்பது தி.மு.க., ஆட்சியில் தனித் துறையாகவே வளர்ந்திருக்கிறது.
இந்த சூழலில், ஜி.டி.பி.,யை 16 சதவீதமாக எப்படி உயர்த்துவது, 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எப்படி எட்டுவது?
நம்மிடம், தொழில் துறையில் போதுமான உள்கட்டமைப்புகள் இருக்கின்றன. ஹரியானா, ம.பி., குஜராத்தை மிஞ்ச முடியும். ஆனால், போதைப் பழக்கம் தொழில்துறையை சீரழிக்கிறது.
மதுவிலக்கை ஒரே நாளில் அமல்படுத்த முடியாது. நீண்ட கால திட்டம் தேவை. புதிய குடிகாரர்கள் உருவாகாமல் தடுப்பது, தினசரி குடிப்போரின் எண்ணிக்கையை குறைப்பது போன்ற விஷயங்களில், அரசு கவனம் செலுத்த வேண்டும். இதற்காக, லைசென்ஸ் திட்டத்தை கொண்டு வரலாம்.
போதை பழக்கம்
சாராயம் குடிப்போரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாமல், 1 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி சாத்தியமே இல்லை. தங்கள் பாக்கெட் நிரம்பினால் போதும் என நினைக்காமல், முதல்வரும், அவரது கட்சிக்காரர்களும், போதைப் பழக்கத்தை ஒழிக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.