துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
ADDED : மார் 27, 2024 11:57 PM
சென்னை:கடந்த 2018ல், துாத்துக்குடியில் 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது; 13 பேர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அளித்த அறிக்கையின்படி, வழக்கை முடித்தது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், வழக்கை லோக்சபா தேர்தலுக்கு பின் விசாரிக்க கோரினார்.
மனுதாரர் வழக்கறிஞர் ஹென்றி, ''இச்சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை வழங்கவில்லை,'' என்றார்.
இதையடுத்து, ஒழுங்கு நடவடிக்கைகள் விபரங்களை, மனுதாரருக்கு அறிக்கையாக வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்., 25க்கு தள்ளி வைத்தனர்.