தூத்துக்குடி கடலில் ரூ.80 கோடி போதைப்பொருள் பறிமுதல்!
தூத்துக்குடி கடலில் ரூ.80 கோடி போதைப்பொருள் பறிமுதல்!
UPDATED : மார் 08, 2025 07:02 AM
ADDED : மார் 08, 2025 06:52 AM

தூத்துக்குடி; தூத்துக்குடியில் சிறியரக கப்பலில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்புள்ள போதை பொருள் நடுக்கடலில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சிறிய ரக கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில் போதை பொருள் கடத்திச் செல்லப்படுவதாக வருவாய் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடலோர காவல்படை உதவியுடன் கப்பலை நடுக்கடலில் வழி மறித்த அதிகாரிகள், தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு கப்பலை கொண்டு வந்தனர். பின்னர் கப்பலில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சோதனையில், கப்பலில் பதுக்கி வைத்திருந்த ஹசீஸ் எனப்படும் செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் போதை பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர். 30 கிலோ எடை கொண்ட இந்த போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ரூ.80 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. கப்பலில் பயணித்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 2 பேர் உள்பட 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.