ஆரம்பிக்கவே இல்ல...அதுக்குள்ள நடிகர் விஜய்க்கு எழுந்த சிக்கல்! பொங்கும் ரசிகாஸ்
ஆரம்பிக்கவே இல்ல...அதுக்குள்ள நடிகர் விஜய்க்கு எழுந்த சிக்கல்! பொங்கும் ரசிகாஸ்
ADDED : செப் 02, 2024 11:50 AM

சென்னை: கட்சியின் முதல் மாநாட்டை அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நடத்தலாமா என்று நடிகர் விஜய் தீவிர ஆலோசனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை பரபரக்க வைத்திருக்கின்றன.
அரிதாரம்
தமிழக வெற்றிக்கழகம் என்னும் பெயரில் அரசியல் அரிதாரம் பூசிய நடிகர் விஜய், அடுத்தடுத்த தமது அரசியல் பயணத்தை வடிவமைத்து வருகிறார். கட்சிக் கொடி, பாடல் என சட்டென்று வேகம் எடுத்த அவரது பயணம் இப்போது அரசியல் மாநாடு என்ற கட்டத்தில் வந்து நின்று கொண்டிருக்கிறது. மாநாட்டில் கட்சிக் கொடிக்கான விளக்கத்தை அறிவிப்போம் என்று நடிகர் விஜய் அறிவித்திருந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 23ம் தேதி மாநாட்டை நடத்த முடிவெடுத்து இருந்தார்.
மனு
மாநாட்டுக்கான அனுமதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கடந்த 28ம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் முறைப்படி மனு அளித்தார். அந்த மனுவில் வி.சாலையில் உள்ள இடத்தில் மாநாடு நடத்த இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, த.வெ.க., புஸ்சி ஆனந்திடம் மாநாட்டில் கலந்து கொள்ளும் வி.ஐ.பி.க்கள் விவரம், வாகன நிறுத்துமிடம், மேடை அளவு என மொத்தம் 21 கேள்விகளை எழுப்பி உரிய பதில் அளிக்குமாறு காவல்துறை நோட்டீஸ் வழங்கி இருக்கிறது.
என்ன செய்யலாம்?
இந் நிலையில் மாநாடு விவகாரத்தில் லேட்டஸ்டாக அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தால் என்ன செய்வது என்று நடிகர் விஜய் தீவிர ஆலோசனையில் இருப்பதாக த.வெ.க., வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. ஒருவேளை மாநாடு நடத்த அனுமதி கிடைக்கவில்லை என்றால் அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடத்திவிடலாம் என்று விஜய் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மழைக்காலம்
அதற்கான காரணம் ஒன்றும் இருக்கிறது. இனி வரும் அடுத்த 3 மாதங்கள் மழைக்காலம் என்பதால் அந்த காலக்கட்டத்தில் மாநாடு நடத்தினால் சிறப்பாக இருக்குமா? ஆண்டின் தொடக்கமாக எழுச்சியுடன் ஜனவரியில் மாநாடு நடத்தினால் என்ன என்ற யோசனையில் விஜய் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஜோதிடர்
ஜனவரி மாதம் சரியாக இருக்குமா? என்று புஸ்சி ஆனந்த் பிரபல ஜோதிடர் ஒருவரை அணுகி இருப்பதாகவும் த.வெ.க., வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. மாநாடு தேதி தள்ளிப்போனால் என்ன செய்வது என்று கொந்தளிப்பிலும், ஆற்றாமையிலும் ரசிகர்கள், கட்சியினர் உள்ளனர் என்பது தான் இப்போதைய நிலவரம்.