அப்படி போடு! தேசிய அளவில் முதல் இடத்தில் டிரெண்டிங்...! #TvkVijayMaanadu
அப்படி போடு! தேசிய அளவில் முதல் இடத்தில் டிரெண்டிங்...! #TvkVijayMaanadu
ADDED : அக் 27, 2024 03:39 PM

சென்னை: தேசிய அளவில் எக்ஸ் வலைதளத்தில் விஜயின் த.வெ.க., மாநாடு முதலிடத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன சிலர் வரவில்லை. வந்த சிலரும் நடப்புக்கால அரசியல் காற்றில் பறந்துவிட்டனர் அல்லது கரைந்தே போய்விட்டனர். அதற்கு உதாரணங்கள் பல இருந்தாலும் அதை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு இன்றைய தினம் கிட்டத்தட்ட எல்லோரும் நடிகர் விஜய் தொடங்கிய த.வெ.க., கட்சியின் முதல் மாநாட்டை உச்சி முகர பேச ஆரம்பித்துவிட்டனர்.
எதிர்பாராத தருணங்களில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும். அப்படித்தான் இன்று விஜய் கட்சி மாநாடு தொடங்கும் முன்னே சமூக வலைதளங்களில் லேசாக எட்டி பார்த்தது தமிழக வெற்றிக்கழகம் என்னும் பெயர். இன்று காலை எக்ஸ் வலை தளத்தில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்தது.
பின்னர் நேரம் நகர, நகர மெல்ல அடுத்த 5 இடங்களுக்குள் நுழைந்த தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயர் டிரெண்டிங்கில் வேகம் எடுத்து முன்னே செல்ல ஆரம்பித்தது. கடந்த 3 மணி நேரத்துக்கும் மேலாக, தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயர் தேசிய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
இதுவரை காணாத படை, இது வெற்றி படை, யாரும் கண்டிராத மாபெரும் எழுச்சி என்று இஷ்டம் போல த.வெ.க., தொண்டர்கள் மாஸாக வலம் வரும் போட்டோக்கள், வீடியோக்கள் டிரெண்டிங்காகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. மாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்ட போது எடுத்த வீடியோக்கள், வரும் வழியில் கண்ணில் தென்பட்டவை, யார், யார் எல்லாம் மாநாட்டுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர் என யூடியூபராக மாறி தொண்டர்கள் கலக்கி தள்ளி உள்ளனர்.
கட்சி ஆரம்பித்த போது இருந்த கலகலப்பை விட, மாநாட்டில் அவரது தொண்டர்கள், ஆதரவாளர்கள், ரசிகர்கள் என பெரும்படையே இன்று தான் தீபாவளி பண்டிகை என்று கொண்டாடி வருகின்றனர். மொத்தத்தில் வி. சாலை எனப்படும் விக்கிரவாண்டி சாலையின் பெயரும் த.வெ.க. என்ற பெயருடன் பலரும் அறியும் வகையில் அமைந்துவிட்டது என்பது நிஜம்!