ADDED : மே 06, 2024 01:18 AM
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே முத்தலாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் 35. சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். மனைவி சந்தனமாரியம்மாள் 32. பாலமுருகன் தன் வருமானத்தை மனைவி பெயருக்கு அனுப்பி வைத்தார். சந்தன மாரியம்மாள் துாத்துக்குடி கிருபை நகரில் புதிதாக வீடு கட்டி வசித்து வந்தார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு பாலமுருகன் சொந்த ஊர் திரும்பினார். தான் அனுப்பிய பணம், நகைகளை சந்தன மாரியம்மாள் செலவு செய்தது தெரியவந்தது.
சமூக வலைத்தளங்களில் சந்தன மாரியம்மாள் வீடியோ படங்களை பதிவிட்டு பல ஆண்களுடன் பழக்கம் ஏற்படுத்தி இருந்தார்.
இதனால் பாலமுருகனுக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 6 மாதங்கள் பிரிந்து வாழ்ந்தனர். சந்தன மாரியம்மாள் தனது தாய்மாமன் காளிமுத்துவிடமும் நகைகளை வாங்கி திரும்ப தரவில்லை.
இதில் ஆத்திரமுற்ற கணவர் பாலமுருகன், தாய்மாமன் காளிமுத்து நேற்று முன்தினம் இரவு கணேஷ் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே டூவீலரில் வந்த சந்தன மாரியம்மாளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் தென்பாகம் போலீசில் சரணடைந்தனர்.
அரிவாளால் வெட்டும்போது பாலமுருகனுக்கு கையில் காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.