ஏரியில் பாய்ச்சிய மின்சாரம் கால் வைத்த 2 பேர் படுகாயம்
ஏரியில் பாய்ச்சிய மின்சாரம் கால் வைத்த 2 பேர் படுகாயம்
ADDED : மார் 08, 2025 12:56 AM
மகேந்திரமங்கலம்:கிருஷ்ணகிரி மாவட்டம், பனமுட்லு ஏரியூரைச் சேர்ந்தவர் மாரியப்பன், 58. இவர், அவரது கிராமம் அருகே உள்ள, தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த மோரனஹள்ளிபுதுார் கொல்லை ஏரிக்கு, ஆடுகளை மேய்ச்சலுக்காக, கடந்த, 3ம் தேதி அழைத்துச் சென்றார். பின்னர், மாலையில் வீட்டிற்கு திரும்பிய போது, இரு ஆடுகள் மாயமானது.
மாரியப்பனின் உறவினர்களான ராஜேந்திரன், 33, ராஜமாணிக்கம், 27, ஆகியோர் ஆடுகளை தேடி ஏரிக்கு சென்றனர். அப்போது, ஏரி தண்ணீரில் கால் வைத்தபோது, ராஜேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்ததைக் கண்ட ராஜமாணிக்கம் அவரை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் படுகாயமடைந்து மயங்கினர்.
மறுநாள் அவர்களது உறவினர்கள் மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மகேந்திரமங்கலம் போலீசார், ஏரியில் சட்டவிரோதமாக மீன் பிடிக்க மின்சாரம் பாய்ச்சப்பட்டதா அல்லது திருட்டுத்தனமாக மீன் பிடிப்பதை தடுக்க மின்சாரம் பாய்ச்சப்பட்டதா என, விசாரிக்கின்றனர்.