ADDED : மார் 11, 2025 12:57 AM

சென்னை; சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த, நீதிபதிகள் ஆர்.சக்திவேல், பி.தனபால் ஆகியோர், நேற்று நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக ஆர்.சக்திவேல், பி.தனபால் ஆகியோர், 2023 மே மாதம் நியமிக்கப்பட்டனர். அவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் இடம்பெற்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.
அதை ஏற்று, இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க, ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.
அதன்படி, நீதிபதிகள் ஆர்.சக்திவேல், பி.தனபால் ஆகியோர் நேற்று சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்கள் 75. அதில், 10 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.