UPDATED : ஆக 01, 2024 04:35 AM
ADDED : ஜூலை 31, 2024 11:37 PM

ஆத்துார்:''என் கைதுக்கு அமைச்சர் உதயநிதி தான் காரணம்,'' என, சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
சென்னையை சேர்ந்த, யு - டியூப் சவுக்கு சங்கர் பேசியது தொடர்பாக, ஊட்டி சைபர் கிரைமில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக புழல் சிறையில் இருந்த அவரை, கடந்த, 29ல், ஊட்டி போலீசார், காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று காலை, 7:00 மணிக்கு, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் மீனப்ரியா தலைமையில், 17 போலீசார், சேலம் வழியே சென்னைக்கு, 'சிசிடிவி' பொருத்திய போலீஸ் வேனில், அவரை அழைத்துச் சென்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வந்தபோது, வயிறு வலி, மயக்கம் வருவதாக கூறினார். தொடர்ந்து மயக்கம் அடைந்தார். மதியம், 12:30 மணிக்கு அவரை, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இ.சி.ஜி., உள்ளிட்ட பரிசோதனை செய்து, 'குளுக்கோஸ்' போடப்பட்டது. பின், வயிறு வலிக்கு மருத்துவ குழுவினர் மாத்திரை வழங்கினர். 1:30 மணிக்கு போலீசார் எடுத்துச்சென்ற தயிர் சாதத்தை சாப்பிட, அவர் மறுத்துவிட்டார். மதியம், 2:40க்கு அவரை, போலீசார் வேனில் ஏற்றினர்.
அப்போது பத்திரிகையாளர்கள் கைது குறித்து கேட்டனர். அதற்கு அவர், ''என் மீது மேலும் மேலும் பொய் வழக்குகள், அமைச்சர் உதயநிதி உத்தரவால் போடப்பட்டு கைது செய்து வருகின்றனர். என் கைதுக்கு அமைச்சர் உதயநிதி தான் காரணம்,'' என்றார். தொடர்ந்து அவர் பேச முயன்ற நிலையில், போலீசார் வேன் கண்ணாடி ஜன்னலை மூடிவிட்டனர். பின் புழல் சிறைக்கு அழைத்துச்சென்றனர்.