ADDED : மார் 07, 2025 09:00 PM
சென்னை:'மும்மொழிக் கொள்கை, நிதிப்பகிர்வில் பாரபட்சம், தொகுதி சீரமைப்பு விவகாரம், ஆகியவை தொடர்பாக, மத்திய அரசை கண்டித்து, 13 சட்டசபை தொகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்' என, துணை முதல்வர் உதயநிதி அறிவித்துள்ளார்.
சமீபத்தில், தி.மு.க., இளைஞர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, நிதிப்பகிர்வில் பாராபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தை வஞ்சிப்பது, ஆகியவற்றை கண்டித்து அனைத்து சட்டபை தொகுதிகளிலும் கண்டனம் பொதுக்கூட்டம் நடத்த, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில், தமிழகம் முழுதும் உள்ள 234 தொகுதிகளில், தி.மு.க., இளைஞர் அணி சார்பில், முதன்மை பேச்சாளர், இளம் பேச்சாளர் ஒருவர் என, தொகுதிக்கு இரண்டு பேச்சாளர்கள் பேசுகின்றனர். நேற்று முதல் 10ம் தேதி வரை, 13 சட்டசபை தொகுதிகளில், கூட்டம் நடக்கும் பட்டியலை, உதயநிதி நேற்று வெளியிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தி.மு.க., அரசின் சாதனைகளை, எளிய மக்களுக்கும் புரியும் வகையில், கூட்டத்தில் விளக்க வேண்டும். கட்சி அலுவலகம் தயாரித்துள்ள துண்டறிக்கையை, வீடு, வீடாக சென்று விநியோகித்து, அவர்களை அக்கூட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும். இப்பணியை மிகச் சிறப்பாக செய்யும்போது, மத்திய அரசின் மும்மொழி கொள்கை குறித்த மோசமான விளைவுகளை மக்கள் உணர்வர். அது மும்மொழி கொள்கை திணிப்பை நிச்சயம் கட்டுப்படுத்தும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.