'தெளிவில்லாத திட்டமிடலால் மன உளைச்சலில் தவிக்கிறோம்!' கைத்தறி துறையினர் கண்ணீர்
'தெளிவில்லாத திட்டமிடலால் மன உளைச்சலில் தவிக்கிறோம்!' கைத்தறி துறையினர் கண்ணீர்
ADDED : மே 26, 2024 01:25 AM
சென்னை:ஒழுங்கு நடவடிக்கை, நொடிக்கொரு முறை மாறும் முடிவுகள், திடீரென வழங்கப்படும் பணி மாறுதல்கள் போன்றவற்றால், பணியாளர்களின் உடல் நலம் மற்றும் மன நலம், வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்து, எங்கள் உரிமைகளை மீட்டுத் தாருங்கள்' என, மாநில மனித உரிமை கமிஷனுக்கு, கைத்தறித் துறை பணியாளர்கள் மனு அனுப்பி உள்ளனர்.
அதில் கூறியுள்ளதாவது:
தினமும் அலுவலக நேரத்தை தாண்டி, இரவு 9:00 மணிக்கு வீட்டுக்கு செல்ல நேரிடுவது, அனைத்து விடுமுறை நாட்களிலும் அலுவலகம் வர கட்டாயப்படுத்துவது போன்றவற்றால், குடும்ப வாழ்க்கையில் சண்டை சச்சரவு ஏற்படுகிறது.
ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் திட்டங்களை ஆவணப்படுத்த, அடிக்கடி, 'கலர் பிரின்ட்' எடுக்கப்படுகிறது. இதற்கான செலவுகளை, சரக அலுவலகங்களில் பெற்றுக் கொள்ள, வாய்மொழி உத்தரவு வழங்கப்படுகிறது. இதற்கு தனி நிதி ஒதுக்கப்படாததால், பணியாளர்கள் சொந்த பணத்தில் செலவு செய்யும் நிலை உள்ளது.
கடந்த எட்டு மாதங்களில், ஆணையரகத்தில் 560 வீடியோ கான்பரன்ஸ் ஆய்வுக் கூட்டங்களும், நேரடியாக 150க்கும் மேற்பட்ட ஆய்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
பெரும்பாலான அலுவலக பணி நேரங்களை, ஆய்வுக்கூட்டம் நடத்தி வீணடித்து, அதன்பின் மாலை 6:00 மணிக்கு மேல் செய்ய வேண்டிய பணிகளை பட்டியலிட்டு, அடுத்த நாள் காலைக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்துவதால், இரவு பணியாற்ற வேண்டிய நிலை, மறைமுகமாக ஏற்படுத்தப்படுகிறது.
எண்ணிக்கையில் அடங்காத தலைப்புகளில், 'வாட்ஸாப்' குரூப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் தகவல்களை தினமும் இரவு, பகல் பாராமல் பதிவேற்றம் செய்யக் கோரும் அவலங்களும் நடக்கின்றன. இதனால், அனைத்து பணியாளர்களுக்கும் உளவியல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மொபைல் போனை எந்நேரமும் கையில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முக்கிய கோப்புகளில், தெளிவில்லாத, முழுமையற்ற குழப்பமான ஆணைகளை பிறப்பித்து, அவற்றை செயல்படுத்த கட்டாயப்படுத்துவதால், கோப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த நிலை தெரியாமல், அப்படியே வைத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
பணியாளர்களை பணியிடமாற்றம் செய்வோம்; ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம் என தேவையின்றி பயமுறுத்துகின்றனர்.
தெளிவில்லாத திட்டமிடல், தொடர்பில்லாத முடிவுகள், உரிய நேரத்தில் வழங்கப்படாத ஒப்புதல்கள், உள்நோக்கம் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள், நொடிக்கொரு முறை மாறும் முடிவுகள், திடீரென வழங்கப்படும் பணி மாறுதல்கள் போன்றவற்றால், பணியாளர்களின் உடல்நலம் மற்றும் மனநலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உயர் அதிகாரிகள் கூறுகையில், 'இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட அரசு திட்டங்களை விரைவாக முடிப்பதற்காக, ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதை சிலர் தவறாக புரிந்திருக்கலாம்' என்று சமாளித்தனர்.