உறுதி அளித்தபடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முதல்வருக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்
உறுதி அளித்தபடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முதல்வருக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்
ADDED : ஆக 31, 2024 12:38 AM

சென்னை: தமிழகத்திற்கு, 'சமக்ரா சிக் ஷா' திட்டத்தின் கீழ், மத்திய அரசு வழங்க வேண்டிய, இந்த ஆண்டுக்கான முதல் தவணை 573 கோடி ரூபாய், முந்தைய ஆண்டுக்கான 249 கோடி ரூபாயை, மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என, கடந்த 27ம் தேதி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு பதில் அளித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
கடந்த நிதியாண்டு, 'சமக்ரா சிக் ஷா' திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 1,876.15 கோடி ரூபாயை மத்திய அரசு, நான்கு தவணையாக விடுவித்துள்ளது. நடப்பாண்டு இத்திட்டத்திற்கு 4,305.66 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம், 2022 செப்டம்பரில் துவக்கப்பட்டது. இத்திட்டத்தில் சேர நடப்பு கல்வியாண்டில் கையெழுத்திடுவதாக, கடந்த மார்ச் 15ம் தேதி தமிழக அரசு உறுதி அளித்தது. அதைத் தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் வரைவு, தமிழக பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது. அதன்பின், தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என, கடந்த ஜூலை 6ம் தேதி தமிழக அரசு கடிதம் எழுதியது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
தமிழகம் அமல்படுத்தி உள்ள, 'சமக்ரா சிக் ஷா' திட்டம், தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதி. புதிய தேசிய கல்விக் கொள்கை, சிறந்த பலன்களை வழங்கும். பன்மொழி கற்றல் மற்றும் தாய் மொழியில் கல்வி கற்றலை ஊக்குவிக்க, மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுத்து வருகிறது.
உலகின் பழமையான செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்வது பெருமைக்குரிய விஷயம். தமிழ் மொழியை கற்பதற்கு வசதியாக, கடந்த ஜூலை 29ல் பிரத்யேக தமிழ் அலைவரிசை துவக்கப்பட்டது. தமிழ் மொழி உட்பட பன்மொழிகளை, நாடு முழுதும் உள்ள மாணவர்கள் கற்பதை ஊக்குவிக்க, மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சி எடுத்து வருகிறது.
கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்தவும், அரசு பள்ளிகளை மேம்படுத்தவும், பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை, தமிழக அரசு ஏற்றுக்கொள்வது முக்கியம். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த, தமிழகம் முன்வரும் என நம்புகிறோம்.
கூட்டு முயற்சிகள் வழியே, அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் கல்வி முறையை உருவாக்குவதை, மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, தமிழக அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.