ரியல் எஸ்டேட் வழக்குகளை முடிப்பதில் உ.பி., முன்னிலை: பின்தங்கிய தமிழகம்
ரியல் எஸ்டேட் வழக்குகளை முடிப்பதில் உ.பி., முன்னிலை: பின்தங்கிய தமிழகம்
UPDATED : ஜூன் 27, 2024 04:22 AM
ADDED : ஜூன் 27, 2024 12:36 AM

சென்னை: நாட்டில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில், மிக குறைந்த அளவாக, 0.3 சதவீத ரியல் எஸ்டேட் வழக்குகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வீடு, மனை விற்பனையில் முறைகேடுகளை தடுக்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2016ல் நிறைவேற்றப்பட்டது. இதை அமல்படுத்துவதற்காக மாநிலங்களில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், தீர்ப்பாயம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.
தமிழகத்தில், 2017ல் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தீர்ப்பாயம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. அனைத்து மாநிலங்களிலும் ரியல் எஸ்டேட் சட்டம் அமலாக்கப்படும் விதம் குறித்தும் அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை ஆய்வு செய்கிறது.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக்குழு வாயிலாக, ஒவ்வொரு மாநிலத்திலும், ரியல் எஸ்டேட் ஆணையங்களில் வழக்குகள் முடிக்கப்படும் விதம் குறித்து, சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பான விபரங்களை வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாடு முழுதும், 2023ல், 1.16 லட்சம் ரியல் எஸ்டேட் வழக்குகள் அதற்கான ஆணையங்கள் வாயிலாக முடிக்கப்பட்டுள்ளன. இதில், உத்தர பிரதேசத்தில், 38 சதவீதம் அதாவது, 44,194 வழக்குகள், ஹரியானாவில், 18 சதவீதம் அதாவது, 20,934 வழக்குகள், மஹாராஷ்டிராவில், 13 சதவீதம் அதாவது, 15,119 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.
ரியல் எஸ்டேட் திட்டங்கள் தொடர்பான மொத்த வழக்குகளில், 69 சதவீத வழக்குகள் இந்த, 3 மாநிலங்களில் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில், தமிழகத்தில், 2023ல், 459 வழக்குகளில் மட்டுமே, உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், ஒட்டுமொத்த வழக்குகள் மற்றும் அவற்றை முடிப்பதில், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில், 0.3 சதவீத வழக்குகளுக்கு மட்டுமே தீர்வு கிடைத்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து, ரியல் எஸ்டேட் மதிப்பீட்டாளர்கள் கூறியதாவது:
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ரியல் எஸ்டேட் ஆணையம், தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள நியமனங்கள் தொடர்பாக, பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
குறிப்பாக, இந்த அமைப்புகளின் செயல்பாடுகள், முழுமை பெறாத ஒன்றாக உள்ளது. இந்த அமைப்புகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை செயல்படுத்துவதற்கும் உரிய வழிமுறை இல்லாத சூழல் காணப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.